எங்கே சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல்? சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களை வசைபாடுவதை ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும், கட்சிகளும் முக்கிய பணியாக செய்து வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சி செய்வது காங்கிரசாக இருந்தாலும், பாரதிய ஜனதாவாக இருந்தாலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது தான் இதுவரை வழக்கமாக கொண்டுள்ளனர்.. இதற்கு முன் காங்கிரஸ் எடுத்த நடைமுறைகளை அப்படியே பின்பற்றி பிஜேபியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது பிஜேபி அமல்படுத்தியுள்ள மக்கள் விரோத திட்டங்களாக கருதப்படும் திட்டங்களையோ, அல்லது கொண்டு வருவதாக கூறியுள்ள திட்டங்களையோ நாங்கள் வந்தால் நிறைவேற்ற மாட்டோம் என காங்கிரஸ் கட்சி கூற முடியாது, கூறவும் கூறாது என்பது தான் யதார்த்தம்.
அப்படி இருக்கும் நிலையில் மக்கள் விரோத திட்டங்களை இரண்டு கட்சியுமே ஒரே மாதிரியாக கையாளும் பொழுது வெறுப்பு அரசியலை வளர்ப்பது தமிழக இளைஞர்கள் இடையே பிரிவினையை தான் அதிகமாக உண்டாக்கும். இங்கே உள்ள மாநிலக் கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு அவர்களுடன் கூட்டணி வைத்து தான் போட்டியிடுகிறார்கள். ஏனெனில் தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளுக்கு இங்கே அதிகம் பலம் இல்லை. மத்திய அரசின் மூலம் குறைந்தபட்ச நன்மைக்காக தான் தேசிய கட்சி கூட்டணியில் மாநில கட்சிகள் போட்டியிடுகிறார்கள் என்பதனை மறுக்க இயலாது.
இன்று உலக அளவில் ட்ரெண்டான கோ பேக் மோடி என்ற ஹேஷ் டேக்கானது குறிப்பிட்ட சில தமிழ் இயக்கங்களும், குறிப்பிட்ட பிரதான எதிர் கட்சிகளின் மூலம் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்கான பிரதான காரணங்களை கூட என்ன? ஏது? என தெரிவிக்காமல் திட்டமிட்டு செய்யப்படும் இந்த மாதிரியான வெறுப்பு பிரச்சார அரசியலானது, இங்கே அரசியல் கட்சிகளில் உள்ள இளைஞர்கள் இடையே பிரிவினையை தான் ஏற்படுத்தும்.
தமிழகத்திற்கு நல்லது வருகிறது என்றால் அனைவரும் வரவேற்க வேண்டும், கெட்டது என்றால் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றுமை இல்லாமல் கட்சி சார்ந்து, இயக்கங்கள் சார்ந்து, நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் ஒரே மனப்பான்மையில் இருப்பது என்பது சிறந்த அரசியலுக்கு எடுத்துக்காட்டாக அமையாது. நல்லது செய்யும்போது வரவேற்பதும் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவதும் தான் எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆக இருக்க வேண்டும்.
ஒருவேளை அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்ட மக்கள் விரோத திட்டங்கள் என கூறப்படும் எந்த திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என உறுதியளிக்கமாட்டார்கள் என்ற யதார்த்தத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அப்படி இருக்கும் போது, இந்த வெறுப்பு அரசியல் இணையதள பிரச்சாரமானது தமிழக அரசியலுக்கு சிறந்த சூழ்நிலையாக இருக்காது என்பது மட்டும் உறுதியாகிறது. வெறுப்பு அரசியலை விட்டு ஆக்கபூர்வமான நாகரிக அரசியலை ஒவ்வொரு கட்சியினரும் பேச வேண்டும். அதனை கட்சி தலைமைகள் வற்புறுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
தற்போது 2019 இல் தேர்தலுக்கு முன்பாக மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்படுவது தேர்தலுக்காக என்ற பிரச்சாரம் வைக்கப்படுகிறது. கடந்த 2004 முதல் 2009 தொடக்கம் வரை அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பல போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டமானது அப்போது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேர்தலுக்கு பிறகு அதே கூட்டணியில் பாமக இல்லாத ஆட்சி தான் மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெற்றது. சுமார் இரண்டு ஆண்டுகள் 2011 வரை காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி செய்த நிலையில் அப்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை.
மேலும் மாநிலத்தில் இல்லாமல் மத்திய அரசுடன் 2013 முடியும் வரை காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக இந்த திட்டத்தினையும் செயல்படுத்த முன்வரவில்லை. மேலும் 2009 – 2014 ஆம் ஆண்டு வரை மதுரை தொகுதி எம்பி ஆக இருந்தவர் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி. மத்திய அமைச்சராக இருந்தும் கூட அத்தொகுதியில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவருவதற்கு திமுக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முன் வரவில்லை என்ற நிலையில் தற்போது அதனை செயல்படுத்த முன் வரும் அதிமுக, பாஜக அரசை விமர்சிப்பது என்பது ஆக்கபூர்வமான அரசியலில் ஒரு சிறந்த எதிர்க்கட்சிகள் செய்யக்கூடிய செயலும் இல்லை.
தற்போது ”பாஜக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் விரோத திட்டங்களாக கருதப்படும் திட்டங்களை திமுக-காங்கிரஸ் கூட்டணி நாங்கள் வந்தால் நிச்சயம் கைவிடுவோம்” என்று அறிவிக்க வாய்ப்பு இருந்தால் கூட ஒருவேளை இது போன்ற பிரச்சாரங்களை செய்வதில் ஒரு அர்த்தம் உள்ளது. ஆனால் அவ்வாறு அறிவிக்க தயாராக இல்லை என்ற போது இன்று நடக்கும் இதே பிரச்சாரம் நாளை வேறு ஒரு கட்சிக்கும் நடக்கும். இதுபோன்ற வெறுப்பு அரசியலை வளர்ப்பது தமிழக இளைஞர்களிடையே பிரிவினையை தான் உண்டாக்கும்.
கட்சிகள் ஒரே நிலையில் இருக்கும் போது மக்களிடையே மட்டும் ஏன் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது என்பதனை சிந்தித்து தமிழகத்திற்கு நல்லது வருகிறது என்றால் அனைவரும் வரவேற்க வேண்டும், கெட்டது என்றால் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றுமை அரசியலை பின்பற்றினால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது நடக்கும். இல்லையேல் மாறாக சமூக வலைத்தளங்களால் கலவரம் தான் உண்டாகும்.