கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பாலகிருஷ்ண ரெட்டி என்பவர் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கல் எறிந்தது தொடர்பான வழக்கை எம்.எல்.ஏ, எம்பிக்கள் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் படி குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் இவர் உட்பட 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.
மேலும், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, எடப்பாடி அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கீழ்நீதிமன்றம் அளித்த 3ஆண்டு சிறைக்கு எதிராக பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீடு செய்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இதில் தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனை தொடர்ந்து சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.