எந்த மாதத்தில் எந்த காரியங்களை செய்யலாம்?

சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே சில சுபகாரியங்களை செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி எந்த மாதத்தில் எந்த சுபகாரியம் செய்யலாம் என்று பார்ப்போம்.

சித்திரை, வைகாசி, ஆனி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர் மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் கிணறு வெட்டினால் அது என்றும் வற்றாது.

புரட்டாசி மாதத்தில் வரும் விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிட்டும். அது வாழ்க்கைக்கு சிறப்பாக பயன்படும்.

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது.

பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

சித்திரை, ஆடி, தை ஆகிய மாதங்களில் முதல் தேதிக்கு முன்னால் மூன்று நாட்களும், பின்னால் மூன்று நாட்களும், ஐப்பசி மாதத்தில் முதல் தேதிக்கு முந்தைய நாளும், மறுநாளும் மற்ற மாதங்களின் முதல் தேதிக்கு பனிரெண்டு மணி நேரம் முன்னாலும் பின்னாலும் எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஏதாவதொரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள், இரண்டு பௌர்ணமிகள் வருமானால் அம்மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

ஏதாவதொரு மாதத்தில் திங்கள், புதன் அல்லது வெள்ளிக்கிழமைகள் ஐந்து முறை வருமானால் அந்த மாதம் செல்வங்களும், மிகுந்த நன்மைகளும் தரும் மாதம் ஆகும். அதேபோல் ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வந்தால் தீமை தரக்கூடியவை ஆகும்.

ஏதாவதொரு மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் வந்தால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். அதேபோல் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வந்தால் உடல்நலம் பாதிக்கும். மருத்துவ செலவு அதிகமாக இருக்கும்.