காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாளை சேர்ந்த 78 வயதான செல்லன் சின்னத்துரை என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த முதியவருக்கும் , மட்டுவில் பகுதியை சேர்ந்த வேறு இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக காணி பிணக்கு நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் காணிப்பிணக்கு ஏற்பட்டதில் வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன்போது இருவரும் இணைந்து முதியவரை பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
அத்தாக்குதலில் படுகாயமடைந்த முதியவரை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முதியவர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.
முதியவர் உயிரிழந்தமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிடம் முதியவரின் உறவினர்கள் அறிவித்துள்ளதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.