அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரை தமிழக முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு பிரித்வி செல்லமுத்து என்ற மகன் உள்ளார். பிரித்வி ஈரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்2 வரை படித்துள்ளார்.
அதன் பின் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த இவர், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் பயோ டெக்னாலஜி படிக்க சென்றார்.
படிப்பு முடிந்தவுடன், அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார். அதே பல்கழைகழகத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண்ணும் டாக்டருக்கு படிக்க வந்துள்ளார்.
அப்போது இவருக்கும் பிரித்வி செல்லமுத்துவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர்.
ஏஞ்செலா கிளைபர் படிப்பை முடித்தவுடன், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன் படி பிரித்வி செல்லமுத்து மற்றும் ஏஞ்செலா கிளைபருக்கும் நேற்று வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது. மணமகள் பட்டு சேலை அணிந்து வர, பிரித்வி செல்லமுத்து அவரது கழுத்தில் தாலி கட்டினார்.
நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று இந்த ஜோடி அமெரிக்காவிற்கு பறக்கின்றனர்.