“வீட்டில் கழிவறை வசதி அமைத்து தராத தந்தையை கைது செய்யுங்கள்” என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த 7 வயது சிறுமிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஷானுல்லா. இவரது மகள் ஹனீபா ஜாரா (7). இவர், ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா, ஏழ்மை நிலையில் இருப்பதால் அவருடைய வீட்டில் கழிவறை வசதி கிடையாது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் திறந்த வெளியையே தேடிச்செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து ஹனீபா ஜாரா, ‘வீட்டில் கழிவறை கட்டித்தர வேண்டும்’ என அவருடைய தந்தையிடம் பலமுறை கூறியுள்ளார். அதற்கு தந்தை, பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டித் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமி நன்கு படித்து 2ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்றார். ஆனால் அவருடைய தந்தை, கூறியபடி கழிவறை கட்டித் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி, ‘திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருக்கிறது. கழிவறை கட்டித் தருவதாகக்கூறி தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யுங்கள். அவரிடம், கழிவறை கட்டித் தருவதாக எழுத்து மூலம் உறுதி பெற்றுத் தாருங்கள்’ என்று எழுதிய புகார் மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்துப் பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும், சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியைப் பார்த்து சிறுமியை பாராட்டினார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், சிறுமியின் செயலைக்கண்டு நெகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு, மாணவியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டிக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
மேலும் ஹனீபா ஜாராவை கவுரவிக்கும் வகையில், ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார். இந்நிலையில், ஆம்பூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் சமூக நலத்திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய கபில்தேவ், கூறியதாவது:
இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். நல்ல பண்புகளைக்கொண்ட இளைஞர்களால் நம்நாடு பல மிக்க நாடாக உயரும். இந்தியா ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். உலகில் இந்தியா போன்று எந்த நாடும் இல்லை. பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதனால், இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.
7 வயது சிறுமி ஹனீபா ஜாரா, தன் வீட்டில் கழிவறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது பெருமைக்கு உரியதாகும். இதேபோல் நான் எனது மகளை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சாலை விதியை மீறியதால் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். பிறகு, நான் கிரிக்கெட் வீரர் என்பதை அறிந்த போலீஸார் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். ஆனால் எனது மகள், விதியை மீறியதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினாள். நானும் அபராதம் செலுத்தினேன். அந்த அளவுக்கு குழந்தைகள் சிறு வயதிலேயே சட்டத்தை மதிப்பவர்களாக திகழ்கின்றனர்” என்றார்.
அதைத்தொடர்ந்து அறக்கட்டளை சார்பில், கழிவறை கட்டக்கோரி தந்தை மீது போலீஸில் புகார் அளித்த ஆம்பூர் பள்ளி மாணவி ஹனீபா ஜாராவிற்கு ரூ.1 லட்சம் பரிசு, கலாம் செயற்கைக் கோள் குழுவினர் மற்றும் அதன் இயக்குனர் ஸ்ரீமதி கீசன் குழுவினரை பாராட்டி ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, 50 பயனாளிகளுக்கு கழிவறை கட்டிய சாவி வழங்கிய கபில்தேவ், கிரிக்கெட் அகாடமியையும் தொடங்கி வைத்தார்.