இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லடிப் பாலம் யாராலுமே எளிதில் மறந்துவிடமுடியாத அரிய பொக்கிஷமாகும்.
நூறாண்டுகளை எட்டவுள்ள இந்த பாலம் தமிழர் தாயகத்தின் ஓர் வரலாற்று மரபுரிமைச் சொத்தாக மாறப்போகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை நூறு ஆண்டுகளைக் கடந்த எதுவுமே நாட்டின் மரபுரிமையாக மாற்றப்படுவது வழமை.
அதனடிப்படையில் 1924ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இந்த பாலம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தனது பழமை நிலையினை எட்டுகின்றது.
இந்த பாலத்துக்குரிய சிறப்பு என்னவெனில் பாடும் மீன்களின் ரம்மியமான மெல்லிசையினை அமைதியான இரவு நேரத்தில் அழகாக கேட்கமுடியும் என்பதாகும்.
“மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகர் அழகான மேடையம்மா” என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளில் கூறப்படும் மட்டகளப்பு மண்ணின் எளிளில் இந்த கல்லடிப் பாலத்துக்கும் பெரும் பங்கு உண்டெனலாம்.
இந்த பாலம் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டதனால் லேடி மனிங் பாலம் எனவும் அறியப்படுகிறது. மட்டக்களப்பின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளைகளுக்கு இடைப்பட்ட களப்பினை ஊடறுத்துச் செல்வதாக இந்த பாலம் அமைக்கப்பட்டது.
மடக்களப்பின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதியை அணுகுவதற்கான போக்குவரத்து என்பது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருந்துள்ளது. இதற்காக தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு வரலாறு கூறுகின்றது.
இவ்வளவு பெருமை மிக்க இந்த கல்லடிப் பாலத்தில் தற்காலத்தில் பாடுமீனின் பாடலிசைக்கு பதிலாக தமிழர்களின் மரண ஓலமே கேட்கமுடிகிறது. பேய்கள் குடிகொண்ட பாலமாக இருக்குமோ என வெளியூர் மக்களால் அஞ்சப்படும் இந்த பாலத்தில் மரண ஓலங்கள் எதற்காக ஒலிக்கின்றன?
குறுகிய குறுகிய காலத்தில் தற்கொலை செய்யும் இளம் சமுதாயம் ஒன்று இந்த கல்லடிப் பாலத்தை ஆக்கிரமித்து வருகிறது.
வாழ்க்கையில் பட்ட வேதனைகள், அவமானங்கள், தோல்விகள், நோகடிப்புக்கள் அனைத்துமே தற்போதைய இளம் சமுதாயத்தை மாற்றுவழி குறித்து சிந்திக்கவிடாத அளவுக்கு தற்கொலைக்கு தூண்டுகின்றனவா என அச்சப்படவேண்டியுள்ளது.
இதுவரை எத்தனையோ தற்கொலைகள் நடந்தும் அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறியப்படவில்லை. தற்கொலை செய்வோர் தமது எண்ணைத்தை மாற்றினாலன்றி அதைத் தடுப்பதற்கு ஒரு நாதியில்லை.
வாவியில் குதித்து உயிர் விட்ட பின்னர் யார் பெத்த பிள்ளயாக இருக்குமோ என ஒவ்வொரு மனித மனமும் இரக்கப்பட்டு எட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து செல்லும் கணங்களே நீள்கின்றன.
தற்கொலை எதற்குமே தீர்வாகாது. ஒருபோதுமே அது நல்ல தீர்ப்பினைக் கொடுக்காது. மாறாக, இறந்து போனவரின் குடும்பம் நாளுக்கு நாள், ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டு நிம்மதி இழந்து தவிப்பதையே அது தோற்றுவித்துப் போகிறது.
தற்கொலைக்கு துணியும் இளைஞர்களே.. யுவதிகளே… பெரியோரே… சிறியோரே… ஒருகணம் சில விடயங்களை நினைத்துப் பாருங்கள்.
நீங்கள் இறந்துவிடுகிறீர்கள்… கணப்பொழுதில் உங்கள் ஆவி உங்களை விட்டுப் பிரிகிறது… இறப்பின் பின்னால் என்ன நிம்மதியைத் தேடுவீர்கள் என்பது இன்னுமே நிரூபிக்கப்படவில்லை. சாவின் பின்பு நிம்மதியைச் சுகிக்கலாம் என்று எந்த மூடன் உங்களுக்குச் சொல்லித் தந்தது? மறு உலகம் இருப்பதைக்கூட நடைமுறை விஞ்ஞானத் தொழிநுட்பங்கள் நிரூபிக்கவில்லை.
அது ஒருபுறம் இருக்க, நீங்கள் இறந்ததன் பிற்பாடு, உங்களைப் பெற்றவர், உங்களோடு கூடப் பிறந்தவர்கள், உங்கள் குடும்பம், உறவுகள் என அத்தனை நிலைகளுமே படுகின்ற வேதனைகளையும் ஆற்றமுடியாத துயரங்களையும் எப்படி ஆறுதல்படுத்துவீர்கள்? அதன்பின்பு பிரச்சினைகள் கூடுமா குறையுமா என்பதைக்கூடவா உங்களால் சிந்திக்க முடியவில்லை?
இறப்பது என்பது சாதாரண விடயமா? ஒரு மரணத்தைப் பொறுத்தவரை இறந்த இன்னொருவனின் உயிரற்ற வெற்றுடலை வைத்துத்தான் ஊகிக்கிறோம். ஆனால் இறக்கும்போது அவன் படும் வேதனைகள், அதாவது உயிர் பிரியும் மரண வலி என்று சொல்வார்களே, அதனை யாராவது நிஜத்தில் உணர்ந்து மீண்டவர்கள் உள்ளனரா?
இறக்கும் அளவுக்கு-மரண வேதனையை அனுபவிக்கும் அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கின்றதெனில் இந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டி வெல்வதற்கும் உனக்கு தைரியம் இருக்கின்றது என்பதை மறந்துவிடாதே.
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான ஒரு சந்தர்ப்பம் இந்த வாழ்க்கை. அது வாழ்க்கையை மட்டும் கொடுக்கவில்லை, வாழ்வதற்கு தேவையான பொருட்கள், உறவுகள், நண்பர்கள், சுற்றங்கள் என்பவற்றையும் கொடுத்து அவற்றுடன் எப்படி இயைந்து வாழவேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
வாழ்க்கையில் தவறு விடாதவர்கள் மனிதர்கள் இல்லை. தவறிச் செய்யும் தவறுகளும் தெரிந்து செய்யும் தப்புகளும் வாழ்க்கையில் தலைகாட்டிச் செல்லும் விடயங்கள்தான். ஒன்றோடு எல்லாமே குடிமுழுகிப் போவதில்லை. ஆறுவது சினம், மாறுவது மனம் என்பார்கள். சில நாட்கள் இடைவெளியினை பொறுமையோடு அதற்கு கொடுத்தால் தன்னாலே மாறிப்போய்விடும்.
மனக் குழப்பத்தில் நாம் செய்யத்தூண்டிய செயல்களெல்லாம் மனம் தெளிவடைந்த காலத்தில் எமக்கே வெட்கப்படத்தக்கதாய் அமைவதில்லையா? அட இதற்காகவா இவ்வளவு அழுதேன்? இதற்காகவா இவ்வளவு வேதனைப்பட்டேன்? என்று எம்மை நாமே கேட்பதில்லையா?
தற்கொலையை நாடாதீர்கள், அதனால் எந்தப் பிரச்சினையையுமே தீர்க்கமுடியாது. பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் பெற்றவர்கள் சிந்தும் வியர்வைக்கும் கண்ணீருக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகம்தான் இந்த தற்கொலை. அந்த துரோகத்தை எந்த காலத்திலுமே இயற்கை மன்னிக்காது.
கல்லடிப் பாலம் நம் தமிழர் தாயகத்தின் அரும்பெரும் சொத்து. அநியாயமாக அதனை மரண ஓலங்கள் நிறைந்த ஆவிகளின் உறைவிடமாக மாற்றிவிடாதீர்கள். கல்லடிப் பாலம் மட்டுமல்ல எங்கேயுமே தற்கொலையை நாடாதீர்கள்.
தற்கொலை ஒருபோதுமே உங்களுக்காய் மற்றவர்களை இரக்கப்படவைக்காது. பித்தர்களென்றும் முட்டாள்களென்றும் இந்த சமுதாயம் உங்களை காலம் காலமாக தூற்றியவண்ணம்தான் இருக்கும். மறந்துவிடாதீர்கள்!!