தமிழிசையின் மற்றொரு முகம்!!

தமிழகத்தின் இணையவாசிகள் மற்றும் மீம் கிரியேட்டர்களால் அதிகம் கலாய்க்கப்பட்டு வரும் அரசியல்வாதிகளில் ஒருவர் பாஜகவின் தமிழக தலைவரான மருத்துவர். தமிழிசை அவர்கள், என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தமிழிசை அவர்களை பாஜகவை ஒதுக்கி சாதாரண பெண் அரசியல்வாதியாக பார்க்கும் பட்சத்தில் அவர் படுஜாலியான கேரக்டர் என்கின்றனர் அவருடன் பேசிய சிலர்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் அரசியல் கடந்து பேசுவதை பார்க்கையில், ‘ அட நம்ம தமிழிசையா? இப்படி?’ என நினைக்கும் அளவிற்கு படுஜாலியான கேரக்டராக தோன்றினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசைக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல. இவரின் குடும்ப பின்னனி அரசியல் சார்ந்து அமைந்துள்ளதால் அரசியல் அவருக்கு பிறந்ததில் இருந்தே பழகி போன விஷயம் தான்.

ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான எதிர்ப்பு எப்பொழுதும் இருக்கும் நிலையில் தந்தை காங்கிரசின் பின்னாலும், மகள் பாஜகவின் பின்னாலும் இருப்பது ஆச்சர்யத்தை தரும் விதமாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு இருக்கையில், குடும்ப நிலையில் கடுமையான எதிர்ப்புகளை மீறியே, அவர் பாஜகவில் பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தந்தை-மகள் இடையே இருக்கும் இணக்கம் குறைவாகவே இருப்பதாய் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அத்தனை எதிர்ப்பையும் மீறி தன்னை தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியாக கட்டமைக்க முயன்று வென்றுவிட்ட அவரின் சாதனை பாராட்டவே தோன்றுகின்றது. மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ஆண்கள் ஒரு அரசியல்வாதியாக இருப்பது சில கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்றாலும், அதிகபட்சமாக இருக்க போவதில்லை. ஆனால், ஒரு பெண் அரசியலில் நீடிப்பதில் பல்வேறு விதமான சோதனைகளும், கஷ்டங்களும் நிச்சயம் உள்ளது.

அதிலும், சொந்த கட்சியிலேயே பெண் என்ற காரணத்தால் பலர் ஒடுக்க நினைப்பது அவலமாகும்.அத்தகைய கடினமான சூழ்நிலையில், தமிழத்தில் பிரபலமான பெண் அரசியல்வாதிகளிலான ஜெயலலிதா, கனிமொழி இவர்களின் வரிசையில் பற்பல விமர்சனங்களை கடந்து தமிழிசை அவர்கள் இடம்பெற்று இருப்பது உண்மையில் வியக்கத்தக்க விஷயம் தான்.

இந்த இணையவாசிகள் தமிழிசை அவர்களை அதிகம் கலாய்க்கும் விஷயம் புறத்தோற்றம் தான். உண்மை என்னவெனில் ஒருவரை குறைகூற அவரது செயல்பாடுகளையும், குணத்தையும், பிறரிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் தான் கூற வேண்டுமே ஒழிய எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் அவரது புறத்தோற்றத்தை நக்கலடிப்பது மிகவும் தவறானது.

இருப்பினும், அதைப் பெரிது படுத்தாமல் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் இவரது துணிச்சல், நிச்சயம் இவரது ப்ளஸ் பாயிண்டுகளில் ஒன்று. காரணம், ஒரு பெண் பலரால் விமர்சனத்திற்கு உள்ளாகும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதிலும் உடல் தோற்றம் குறித்து பிறர் விமர்சிக்கும் பட்சத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவே வெட்கப்படும் சூழல் தோன்றும்.

ஆனால், ‘மேடைகளில் ஸ்டூலில் நின்று பேசினார்’, ‘விமான நிலையத்தில் பக்கெட்டில் நின்று பேசினார்’, ‘பரட்டைத்தலை’, ‘குள்ளமானவர்’ என அதிகம் கலாய்த்து மனதை புண்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாமல் தயக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு தைரியமாக கேமரா முன் நின்று பேட்டியளிக்கும் விஷயம் அவரது செயல்பாடுகளை உற்று நோக்குகையில் பாராட்டப்பட வேண்டியதாகவே அமைந்துள்ளது.

இது போன்ற, விமர்சங்கங்களை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, ‘ நாம் செய்யும் செயல்களுக்கு தான் நா வருத்தப்பட வேண்டுமே ஒழிய பிறர் நம் மீது திணிக்கும் அவர்களது எண்ணங்களையும், விமர்சங்களையும் நாம் நினைத்து பார்த்து வருந்துவது தவறு. என்னுடைய முடி இப்பிடி இருக்கு, என்னுடைய புறத்தோற்றம் இப்பிடி இருக்கு, குள்ளமா இருக்கனு நினைச்சி நா என்னைக்கும் வருத்தப்பட்டதே கிடையாது.

யாருக்கும் தீங்கு நினைக்கல, நாட்டு மக்களுக்கு சேவை செய்வது, ஏற்ற தலைமைக்கு உண்மையா இருப்பது, ஒரு அரசியல்வாதியா நா என்ன செய்யணுமோ? அத சரியா செஞ்சிட்டு இருக்கேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கு. இதில் ஏதாவது தவறு செய்தால் தான் வருத்தப்படணுமே ஒழிய நான் காரணமில்லாத விஷயங்களுக்கு நான் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை.

நான் மக்களுக்காக பணி செய்கிறேன். வெளியில் அலைகிறேன். நாள்தோறும் கண்ணாடியும் கையுமாக, தலை களைந்து விடாமல் பாதுகாத்து கொண்டிருக்க நான் நடிகை இல்லையே. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையா சொல்லணுன்னா என்ன கலாய்ச்சி தான் மக்களிக்கிட்ட என்ன அதிகமா கொண்டு சேர்த்திருக்காங்க என்று சொன்னால் அது பொய்யாகாது. இதுல இருக்க நேர்மையான கருத்துக்களை மட்டும் எடுத்துக்கிட்டு நாம் கடந்து விடுவது தான் நமக்கு நல்லது” என்று என்ன தான் நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும், அதை தனக்கு சாதகமான எண்ணத்தோடு பார்ப்பது எல்லோருக்கும் வராது தானே.

சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்சிகளில் பாஜக தோல்வி செய்திகள் வந்த போதும், அதை தமிழிசை எதிர்கொள்ளும் விஷயங்களை நாம் கூர்ந்து கவனித்தால் அவரின் தன்னம்பிக்கை வார்த்தைகளை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார். ஆம், நான் கூறுவது, ‘வெற்றிகரமான தோல்வி’ யை பற்றி தான்.

இது அவரின் தன்னம்பிக்கையின் நிலையையும், அவர் வாழ்வில் நடக்கும் எதிர்மறை விஷயங்களை வித்தியாசமான கோணத்தில் அணுகுவதும் அவரிடம் உள்ள ஸ்பெஷாலிட்டி. நாமும் இனி வாழ்வில் முயன்று தோற்க்கையில்,’ வெற்றிகரமான தோல்வி’யை நினைத்து கொள்வோம்.