திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெருமுட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளர் சண்முகம் மற்றும் விற்பனையாளர் லட்சுமணன் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
அரசு மதுபானக் கடை ஊழியர்கள் இரவு வசூலான 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கடையை பூட்டினர்.
அப்போது பைக்கில் முக மூடி அணிந்திருந்த 2 பேர் திடீரென கைதுப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பணத்தை கேட்டு மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம் 3 லட்ச ரூபாய் பணத்துடன் தப்பி ஓடினார். அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் காலில் பலத்த காயமடைந்தார். எனினும் பணத்துடன் அங்கிருந்து உயிர் தப்பினார்.
இதையடுத்து அந்த நபர்கள் விற்பனையாளர் லட்சுமணனை தாக்கி மூடிய கடையை திறக்குமாறு மிரட்டினர்.
ஆனால், கடைக்குள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
காயத்துடன் தப்பிய சண்முகம் செங்கம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமணைக்கு அனுமதிக்கப்பட்டனர்.துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு வருகை தந்த காவல்துறை அதிகாரி சிபி சக்கரவர்த்தி விசாரணை நடத்தினார்.
துப்பாக்கியால் சுட்ட இரண்டு தோட்டாக்களை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.