தமிழகத்தில் காட்டில் சடலமாக கிடந்த நபர், அவரது மனைவியை பார்க்க சென்ற போது யானையால் தூக்கி வீசப்பட்டு இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே இருக்கும் கண்டி வழி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(40). இந்த கிராமத்தில் பழங்குடியினர் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் முருகனின் மனைவி அருகே இருக்கும் பணப்பள்ளி கிராமத்தில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனைவியை பார்ப்பதற்காக முருகன் புறப்பட்டுள்ளார். இதற்கிடையில் மது அருந்தி, அங்கிருக்கும் காட்டுப் பகுதி வழியே சென்றுள்ளார்.
அப்போது காட்டில் இருந்த யானை ஒன்று முருகனை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதனால் முருகன் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார்.
கணவர் வருகிறார் என்று சொன்னாரே வெகு நேரம் ஆகியும் வரவில்லை என்ற பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் தேடிய போது, பணப்பள்ளி நீர் ஓடை அருகே முருகன் சடலமாக கிடப்பதை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நிறைய காட்டு யானைகள் உள்ளன. இவைகளுக்கு வனத்தில் தேவையான சாப்பாடு, தண்ணீர் இல்லாததால், ஊருக்குள் வந்துவிடுகின்றன என்பது குறித்து ஏற்கனவே எச்சரிக்கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.