கரப்பான் பூச்சி தொல்லைக்கு எளிதாக தீர்வு….

இரவில் ஏதோ அவசர வேலைக்கு, சமையலறை விளக்கை போட்டால், கரப்பான்பூச்சிகள் ஓடிஒளிவதை பார்ப்பது நம் அன்றாட அனுபவம். பகலில் பெரும்பாலும் இவை கண்களில் படாவிட்டாலும், வீட்டில் நாம் அதிகமாக புழங்காத பகுதிகளில் இவற்றை காண முடியும்.

கரப்பான்பூச்சியின் பூர்வீகம் ஆப்பிரிக்காவாக இருக்கலாம் என்றும் 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினம் இது என்றும் கூறுகிறார்கள். வாட்டர் பக், பல்மேட்டோ பக், பாம்பே கனாரி என்று கரப்பான்பூச்சியில் பல வகைகள் உள்ளன.கரப்பான்பூச்சிகள், பாக்டீரியாக்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமைத்து வைத்த பொருட்களில் பாக்டீரியா பரவுவதற்கு இவை காரணமாகின்றன. கரப்பான்பூச்சியால் கெட்டுப்போன உணவை நாம் அறியாமல் உண்பதால் ஃபுட் பாய்சனிங் என்னும் உணவு நச்சினால் பாதிக்கப்படுகிறோம். கரப்பான்பூச்சி தொல்லையிலிருந்து விடுபட சில வழிகளை கீழே காணலாம்.

1.சுத்தம் ‘சுத்தம் சுகம் தரும்’ என்பது பழமொழி. வீட்டை சுத்தமாக பேணினால் கரப்பான்பூச்சி தொல்லை வராது. மேசையில் சிந்திய உணவுப் பொருட்களை அப்படியே விட்டு விடுவது. பாத்திரங்களை கழுவாமல் போட்டு வைப்பது இவையெல்லாம் கரப்பான்பூச்சிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் செயல். கரப்பான்பூச்சிக்கு உணவு கிடைக்காத அளவுக்கு வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால், அவை தாமாக வேறிடம் பார்த்து சென்று விடும்.

2.பூச்சியை கொல்லும் சாதனம் ‘கரப்பான்பூச்சியை ஒழிக்கும் நவீன சாதனமா?’ என்று கிண்டலாக கேட்காமல், கடைகளில் கிடைக்கும் பெய்ட் & டிரப்களை வாங்கி, பூச்சிகள் வரும் இடத்தில் வைக்கலாம். ஒரு கரப்பான்பூச்சி இதை உண்டுவிட்டால், மாட்டிக்கொள்ளும் அத்தனை கரப்பான்பூச்சிகளுக்கும் அந்த விஷம் பரவி எல்லாமே இறந்துபோகும். இல்லையென்றாலும் மாட்டிக்கொள்பவற்றை மொத்தமாக அகற்றி விடலாம்.

3.தண்ணீர் ஒழுக்கை தடுக்க வேண்டும் குளியலறைகளில், சமையலறையில் குழாய்களிலிருந்து ஒழுகும் தண்ணீர் கரப்பான்பூச்சிகளை வீட்டில் தங்க வைக்கும். எந்த ஒரு குழாயிலிருந்து தண்ணீர் ஒழுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டினுள் சூரியஒளி நன்கு பரவும் வகை செய்யவேண்டும். காற்றோட்டம் நன்கு இருந்தால், கீழே சிந்தும் தண்ணீர் ஆவியாகிவிடும். நீர் இல்லாமல் கரப்பான்பூச்சியால் ஏழு நாட்களுக்குமேல் தாக்குப்பிடிக்க இயலாது. வீடு ஈரம் இல்லாமல், நன்கு உலர்ந்து இருந்தால் கரப்பான்பூச்சிகள் தாமாக ‘பை பை’ சொல்லிவிடும்.

4.நெடிமிக்க சுத்திகரிப்பான்கள் வீட்டின் தரையை தீவிர நெடி கொண்ட ஃபினாயில் போன்ற கிருமிநாசினிகள் கலந்த நீரால் குறிப்பிட்ட இடைவெளியில் துடைக்க வேண்டும். நெடிமிக்க சுத்திகரிப்பான்களால் தரை துடைக்கப்பட்டிருந்தால், கரப்பான்பூச்சிகள் வீட்டினுள் வராது. தரையை துடைத்தபின் நீர் எஞ்சி தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5.போரிக் அமிலம் போரிக் அமிலம் மற்றும் போரிக் அமில பொடி ஆகியவை கரப்பான்பூச்சியை துரத்தியடிக்கும் தன்மை கொண்டவை. கரப்பான்பூச்சிகள் வீட்டினுள் வரக்கூடிய பகுதிகள், அவை தங்கும் பகுதிகளில் போரிக் ஆஸிட் பவுடரை தூவி வைக்கவும். வீட்டினுள் போரிக் ஆஸிட்டை தெளிக்கலாம். தண்ணீர் படாமல் இருந்தால் போரிக் ஆஸிட் பவுடர் நெடுநாட்கள் நல்ல பலன் தரும்.

6.பிரிஞ்சி அல்லது பிரியாணி இலை ‘வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள்; பூனை போன்ற செல்ல பிராணிகள் இருக்கின்றன’ வேதிப் பொருட்களை எப்படி பயன்படுத்துவது? என்று திகைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! பிரியாணி இலையை கரப்பான்பூச்சி வரும் இடங்களில் போட்டு வைக்கலாம். அவற்றின் நெடி, கரப்பான்பூச்சிகளை விரட்டி விடும். பிரிஞ்சி அல்லது பிரியாணி இலைகளை துண்டாக்கி வீட்டின் மூலை முடுக்குகளில் போட்டு வைத்தால் பூச்சி பிரச்னை ஒழிந்துவிடும்; குழந்தைகளுக்கோ, வயதானவர்களுக்கோ, செல்ல பிராணிகளுக்கோ எந்த தொல்லையும் நேராது.

7.கரப்பான்பூச்சியும் குளிரும் கரப்பான்பூச்சிக்கு குளிர் ஒத்துக்கொள்ளாது. கோடைக்காலத்தில் கரப்பான்பூச்சிகள் சுறுசுறுப்பாக இருக்கும். இறக்கை முளைத்து ஆங்காங்கே பறந்தும் தொலை தரும். ஆனால், குளிர்காலத்தில் அவை அவ்வளவு உற்சாகமாக செயல்படாது. ஆகவே, முடிந்த அளவு வீட்டை குளுமையாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது கரப்பான்பூச்சி தொல்லை குறையும்.