குழந்தை வளர்ப்பு பொருளாதார ரீதியாக பெரும் சுமையானது என்பதால், தென் கொரியாவில் ஏராளமானோர் செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென் கொரியாவில், நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்துடன், பெரும்பாலான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகின்றனர்.
தென் கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்தவர் காங் சுங் லி (39). தனது மனைவியுடன் வசித்து வரும் இவர், தனது தாயை காணச் செல்லும்போதும், பணி நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்லும்போதும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான சன்சூ எனும் பொமேரியன் வகை நாயுடன் பயணம் செய்வது வழக்கம்.
செல்லப் பிராணி வளர்ப்பு குறித்து காங் சுங் லி கூறியதாவது; ‘‘தென் கொரியாவை பொறுத்தவரை குழந்தை வளர்ப்பு பொருளாதார ரீதியாக பெரும் சுமையானது. அத்துடன், மன அழுத்தம் நிறைந்தது என்பதை நானும் எனது மனைவியும் புரிந்து கொண்டோம். இதனால், செல்லப் பிராணிகளிடம் எங்கள் அன்பை வெளிப்படுத்தினோம். சன்சூ-வை நாங்கள் குழந்தையாகவே நினைத்து வளர்த்து வருகிறோம். எங்களைப்போன்று பல தம்பதிகள் செல்லப் பிராணிகளை வளர்க்கவே விரும்புகின்றனர்” என்றார்.
தென் கொரியாவில் செல்லப் பிராணிகள் தொழில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம், தென் கொரியாவில் குழந்தை பிறப்பு வீதம் 1.05 எனும் அளவுக்கு குறைந்து, உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு வீதமாக உள்ளது. கல்விக்கான கட்டண உயர்வு, வீட்டு வாடகை உயர்வு மற்றும் அதிக வேலை நாட்கள் என பல காரணங்களால் பிறப்பு வீதம் குறைந்ததாகக் கூறப்படுகிறது.