கன்யாகுமரி மாவட்டம் தாழக்குடியில் ஒரு ஆண் குரங்கு ஒன்று சுற்றித் திரிந்தது. இந்தக் குரங்கு, போவோர் வருவதைக் கடிக்கப் பாய்வதும், வீட்டில் நுழைந்து தின் பண்டங்களைத் திருடியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி புகார் கொடுத்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது வீட்டில், அவரது மனைவி பத்மா இருந்த போது, இந்தக் குரங்கு அவர்கள் வீட்டுக் காம்பவுண்டிற்குள் வந்தது.
இந்தக் குரங்கு, திடீர் என்று அந்தப் பெண்ணைத் தாக்கத் துவங்கியது. இதனால், அந்தப் பெண்மணி அலறினார். தன் எஜமானியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தது, அவர்கள் வளர்த்த நாய்.
உடனே, அந்த நாய், தன் எஜமானியைத் தாக்கிய அந்தக் குரங்கிடம் சண்டை போடத் துவங்கியது. ஆனால், அந்தக் குரங்கு, நாயின் மார்பு பகுதியில் பயங்கரமாக கடித்துக் குதறியது.
அதற்குப் பிறகும் அடங்காத அந்தக் குரங்கு, சமையல் அறையில் புகுந்து, அங்குள்ள பாத்திரங்களை எல்லாம் கோபத்துடன் வீசியது.
குரங்கினால் கடுமையாகத் தாக்கப்பட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்த அந்த நாய், மீண்டும், அந்தக் குரங்குடன் சண்டை போட்டது. இதைக் கண்டு, பத்மா அலறினார்.
அவரது சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்தக் குரங்கை விரட்டி விட்டனர். ஆனால், தன் எஜமானியையும், வீட்டையும் காப்பாற்றப் போராடிய அந்த நாய், சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது.
இதைக் கண்டு, பத்மா அழுது கதறினார். இது காண்பவர்கள் கண்களைக் குளமாக்கியது.
அந்தக் குரங்கைப் பிடித்து, வனப் பகுதியில் விட வேண்டும், என்று கிராம நிர்வாக அதிகாரியிடம் அந்தக் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.