திடீரென்று வெடித்த சர்ச்சை – அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

தூத்துக்குடியில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளுக்கு தடை விதித்ததைக் கண்டித்து மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 261 விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றன.

இதில் 121 படகுகள் பதிவு செய்யப்படாதவை. இதனிடையே தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, விசைப்படகின் நீளம் 60 அடியும் 140 குதிரை திறன் இன்ஜினும் உள்ள விசைப்படகுகள் மட்டுமே பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் பதிவு செய்யப்படாத படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

ஆனால், தடை உத்தரவை மீறி பதிவு செய்யப்படாத விசைப்படகுகளும் கடலுக்குச் சென்று வந்தன. அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என மீனவர்களில் சிலர் புகார் அளித்தனர்.

இதனால் மீனவர்களுக்கு இடையே பிரச்சனை எழுந்தது. இந்நிலையில், திங்களன்று பதிவு செய்யப்படாத 70 படகுகள் கடலுக்குச் சென்றன. இரவு 10 மணிக்கு திரும்பி வந்த அந்த படகுகளை, மீண்டும் கடலுக்குச் செல்லக்கூடாது என தடை செய்வதாக மீன்வளத்துறை இயக்குநர் சிவராம கிருஷ்ணன், படகுகளில் இருந்த மீனவர்களிடம் நோட்டீஸ் வழங்கினார்.

இதனைக் கண்டித்து செவ்வாயன்று அதிகாலை 3 மணிக்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எங்களுக்கு அனுமதி இல்லை என்றால் எந்த படகுகளும் கடலுக்குச் செல்லக்கூடாது என மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிற படகுகளும் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இணை இயக்குநர் சந்திரா, காலை 4 மணியளவில் படகு உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் மீனவர்கள் செவ்வாயன்று கடலுக்குச் செல்லவில்லை. இதையொட்டி மீன்பிடி துறைமுகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.