கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் கடந்த 9 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்தனர். 9 நாட்களாக போராட்டம் நடத்தியும் தமிழக அரசு சார்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெற அழைக்கவில்லை. மாறாக பணிக்கு திரும்ப வேண்டும் என மட்டும் கோரிக்கை வைத்து கொண்டிருந்தது. கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசிய ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவினர் தமிழக அரசுக்கு எங்களை பணியை விட்டு நீக்க கூடாது என நன்றாகவே தெரியும். மேலும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு இந்த தேவையை சரி செய்துவிட முடியாது என தெரிந்த காரணத்தினால் தான் இதுவரை தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நீதிபதி கிருபாகரன் அவர்கள் மிகச் சிறப்பான சில கேள்விகளை தமிழக அரசுக்கு வைத்ததும் தமிழக அரசு நிச்சயமாக சிந்தித்திருக்கும் என கருதப்படுகிறது. நீதிபதி கிருபாகரன் அவர்கள் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க முடியும் என்றால் தற்காலிக ஆசிரியர்கள் எவ்வாறு இந்த இடத்தில் தாக்கு பிடிக்க முடியும் அவர்கள் எவ்வாறு மாணவர்களுக்கு கைகொடுப்பார்கள். அவர்களின் அனுபவம் என்ன? என்பன உள்பட சில கிடுக்கிப்படியான கேள்விகளை அரசுக்கு வைத்ததையும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும், அனைத்து அமைப்புகளுக்கும், ஆதரித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.