சிறுமியொருவரை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார்.
பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அவர் பொலிசாரால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையும் பொலிசார் செய்யவில்லையென்று வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலத்திலேயே அவர் வைத்தியசாலையிலிருந்து மாயமாகி விட்டதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர் 24ம் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எஸ்ரே பரிசோதனைக்காக சென்ற சமயத்தில் மாயமாகி விட்டார்.
கடந்த 23ம் திகதி நாவாந்துறையை சேர்ந்த சிறுமியொருவரை கடத்தி, உடுவிலில் உள்ள வீடொன்றிற்கு கொண்டு செல்ல ஒருவர் முயன்றிருந்தார்.
எனினும், சிறுமி கூக்குரலிட, உடுவில் மக்கள் ஒன்றுதிரள, கடத்தல்கார ஆசாமி தப்பி சென்றார். சிறுமி மீட்கப்பட்டார்.
“அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காட்சிகளின் மூலம், கடத்தியவரை அடையாளம் கண்டு வைத்திருந்தோம், இன்று நாவாந்துறை சந்தை பகுதியில் அவர் நடமாடியபோது மடக்கிப் பிடித்தோம்“ என பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.
இன்று அவர் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டபோதும், சந்தேகநபரை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பொலிசார் சிகிச்சைக்கா அனுமதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.