சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களுடன் ஐ.நாவின் சிறப்பு விமானம்!

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஆறு படையினர் காயமடைந்தனர்.

உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் சடலங்களையும் ஏற்றிக் கொண்டு வரும், ஐ.நாவின் சிறப்பு விமானம், வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

இந்தச் சடலங்களை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பொறுப்பேற்கவுள்ளனர்.

ஐ.நா கொடி போர்த்தப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா படையினர் இருவரது சடலங்களுடன், வரும் மாலியில் உள்ள ஐ.நா அமைதிப்படையினரின் கட்டளைத் தளபதி, லெப்.ஜெனரல் டெனிஸ் ஜில்லிஸ்போர்  மற்றும் அவரது பணியகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், விமான நிலையத்தில் வைத்து சடலங்களை முறைப்படி சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கையளிக்கவுள்ளனர்.

சடலம் பொறுப்பேற்கப்பட்டதும், சிறிலங்கா தேசியக் கொடி போர்த்தப்பட்டு, ஐ.நா கொடியை மாலிக்கான ஐ.நா அமைதிப்படைத் தளபதியிடம் கையளிக்கும் அணிவகுப்பு இடம்பெறும்.

அதன் பின்னர், சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்.

அதையடுத்து சடலங்கள் அவர்களின் சொந்த இடங்களான பொலன்னறுவ மற்றும் பொல்பிட்டிகமவுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.