உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாடு!

ஆலய வழிபாட்டுக்கு செல்பவர்கள், உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடையணிந்து ஆலயம் செல்ல வேண்டும். இவ்வாறு கோவிலுக்கு செல்லும்போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும்.

கோவிலுக்குள் சென்றதும் முன் நின்று முதலில் இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து அண்ணாந்து கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுர தரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும்போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து வணங்கும்போது தலைக்கான இரத்த ஓட்டம் சீராகும்.

ஆலயங்களில் கோபுரத்துக்கு எதிரில் நாம் நிற்கும்போது இறைவனான பரம்பொருள் எங்கும் நிறைந்து காணும்படியாக இருக்கிறார். அவருக்கு எதிரில் நாம் மிகவும் சிறியவர்கள் என்ற அடக்க உணர்வு ஏற்படும். மனதில் அகங்காரம் அழிந்து பணிவு தோன்றும். எனவே கோபுரத்தை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.

கோவிலுக்கு உள்ளே சென்ற உடன் முதலில் செய்வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம்போட்டு, பின்பு மூன்றுமுறை கொட்டிக்கொண்டு வழிபடுவது வழக்கம். விஞ்ஞான ரீதியாக, இவ்வாறு கொட்டிக் கொள்வதன் மூலம், மூளைக்குச் செல்லும் நரம்புகளை சுறு சுறுப்பாக்கி நமது இயக்கத்தினை சீராக்குவதாக கூறுகின்றனர். மேலும் புத்தியை செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். செவிகள் இரண்டையும் இழுக்கும்போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும். இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும்.

அடுத்து கோவிலை மூன்று, ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும்போது நடப்பது ஓர் சிறந்த உடற்பயிற்சி ஆகும். அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் செய்வது ஆண்களுக்கான சிறந்த உடற்பயிற்சியாகும்.

இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க நமஸ்காரம் செய்வது பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். கோவிலில் மனதில் இறைவனை நினைவில் நிறுத்தி கண்களை மூடி தியானம் செய்வது மிகச்சிறந்தது.

ஆலயங்களில் காணப்படும் அமைதி மனதிற்குள் ஊடுருவி தெய்வ சக்தியை நமக்கு வழங்கும். ஆகையால் ஆலய வழிபாடு செய்வோம். வாழ்வில் உன்னத நிலையை அடைவோம்.