கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் இரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட புகைப்படமும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் சென்னை போலீசார் தன்னை அவதூறாக பேசியதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் ஒரு காணொளியை அவர் வெளியிட்டு இருந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதனை அடுத்து விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஓட்டுநர் ராஜேஷ். இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த 25-ம் தேதியன்று அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த போது, போக்குவரத்து காவலர்கள் அவரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளதாக தெரிகிறது.
இதனால் மனமுடிந்த அவர் மறைமலைநகர் ரயில் தண்டவாளத்தில் தன தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் அளித்துள்ள காணொளியில் ஒரு மரண வாக்குமூலத்தை தெரிவித்தார்.
அவரின் இந்த தற்கொலைக்கு சென்னை போலீசார் தான் என்றும் கடுமையாகவும், உருக்கமாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரின் தற்கொலைக்கு காரணமான போக்குவரத்து காவலர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இணையதள செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தரவேண்டும். 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.