பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சியை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்த இசைநிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.
இந்நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் உரிய ஆதாரங்களின்றி கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும் மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் கணக்குவழக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.