20 வருடமாக ஒரே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்!

ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் 07 வருடத்திற்கு ஒரு முறை இடமாற்றம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஒரே பாடசாலையில் 20 வருடங்களுக்கு மேற்பட்டு கல்வி கற்பித்து வருவது தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த ஆசிரியர் இடமாற்றம் எதுவும் பெறாமல் 20 வருடங்களுக்கு மேற்பட்டு கல்விகற்பித்து வருவதான தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் குறித்த ஆசிரியர் ஓய்வு வயதினை அடைந்துள்ளதால் தற்போது அவரை இமாற்றம் செய்வது பொருத்தமற்றது என்றும் கல்வி வலய தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல யாழ்மாவட்டத்திலுள்ள பிரபால பாடசாலைகள் உள்ளிட்ட பல பாடசலைகளில் முதல் நியமனம் பெற்றது முதல் தற்போதுவரை இடமாற்றங்களுக்குள் சிக்காது அரசியல் பின்புல செல்வாக்குகளின் மூலம் பல ஆசிரியர்கள் 20 வருடங்களுக்கு மேறபட்டு கல்வி கற்பிக்கின்றபோதும் அவை குறித்த தகவல்களை வழங்க யாழ்மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்கள் மறுத்துவிட்டன.

அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் இவ்வாறு இடமாற்றம் எதுவும் பெறாது ஒரே பாடசாலையில் 20 வருடங்களுக்கு மேற்பட்டு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களது விபரங்களைக் கோரி வடக்கு மாகாணத்திலுள்ள வலயங்களுக்கு தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல்களைக் கோரியிருந்தபோதும் கிளிநொச்சி வலயம் தமது வலயத்தில் ஒரு ஆசிரியர் அவ்வாறு கற்பிப்பதாக தகவல் வழங்கியது.

அதேபோல தென்மராட்சி, துணுக்காய், தீவகம் ஆகிய வலங்கள் தமது வலயத்தில் அவ்வாறு ஆசிரியர்கள் இல்லை என தகவல் வழங்கின.

எனினும் யாழ் வலயம் மற்றும் வலிகாமம் வலயத்தில் பல ஆசிரியர்கள் இடமாற்றங்களைச் சந்திகாது நழுவிவருகின்றபோதும் அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கல்வி வலய அதிகாரிகள் செயற்படும் நோக்கில் தகவல்களை வழங்க மறுத்துவருகின்றனர்.