நெல்லை மாவட்டத்தில், தி.மு.க பிரமுகர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ததை அறிந்த அவரின் மனைவி தன் தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்தவர் மாயராமன். தி.மு.க ஊராட்சி கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அவரின் மனைவி வைரமுத்து.
இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. வைரமுத்து அவரது பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால் அவரது குடும்பச் சொத்துகளுக்கு வாரிசாக இருந்துள்ளார்.
2வது திருமண படத்தை ஃபேஸ்புக்கில் போட்ட கணவன் மாயராமன்
இந்த நிலையில், குழந்தை இல்லாததைக் காரணமாகச் சொல்லியே மாயராமன், தன் மனைவி வைரமுத்துவின் தாயார் வசமிருந்த பல லட்சம் மதிப்புள்ள சொத்துகளை எழுதி வாங்கியுள்ளார்.
மாயராமன் தன் மனைவியிடம், `உனக்குக் குழந்தை இல்லாததால் வேறு திருமணம் செய்யப்போகிறேன்’ என மிரட்டியே அனைத்துச் சொத்துகளையும் எழுதிவாங்கி இருக்கிறார். சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிய அவர், இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார்.
கடந்த வாரம் மாயராமன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த விவரம், அவர் முகநூலில் பதிவிட்டதைப் பார்த்தே வைரமுத்துக்குத் தெரிய வந்துள்ளது.
இது வைரமுத்துக்கு மட்டும் அல்லாமல் அவரின் தாயார் பொன்னம்மாளுக்கும் மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், அவர்கள் ராதாபுரம் போலீஸில் புகார் செய்துள்ளனர்.
ஆனால், ராதாபுரம் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததோடு வைரமுத்துவை அவதூறாகப் பேசி அனுப்பியிருக்கிறார்கள்.
அதனால் வேதனையடைந்த வைரமுத்துவும் பொன்னம்மாளும் நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர்.
ஆனால், எஸ்.பி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அவர்களுக்குக் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏமாற்றப்பட்டதை அறிந்த வைரமுத்துவும் பொன்னம்மாளும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். உறவினர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, ராதாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்கொலை செய்துக்கொண்ட வைரமுத்து, பொன்னம்மாள்
இதனிடையே தற்கொலை செய்துகொண்ட வைரமுத்து, பொன்னம்மாளின் வீட்டில் ஒரு கடிதத்தைப் போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், தங்கள் சாவுக்கு மாயராமன் உள்ளிட்ட சிலர் காரணம் என அவர்களது பெயரை வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, வைரமுத்துவும் அவரின் தாயாரும் தற்கொலை செய்ததற்குக் காரணமாக இருந்தவர்களைப் போலீஸார் கைது செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
காவல்துறையினர் வைரமுத்து அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால், இரு உயிர்கள் பலியாகி இருக்காது எனவும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இருவரது உடலையும் பெறமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்து வருவதால், காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.