தலையை பதம்பார்த்த பந்து: சுருண்டு விழுந்த இலங்கை வீரர்

கான்பெரேராவில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் தலையில் அடிபட்டு இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே சுருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி கான்பெரேரா நகரில் நடந்து வருகிறது.

முதலில் துடிப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 534 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அவுஸ்திரேலிய வீரர்கள் பர்ன்ஸ், கம்மின்ஸ், பாட்டர்ஸன் ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்.

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 2-வது நாளான இன்று தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னே, திரிமானே ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

பாட் கம்மின்ஸ் வீசிய 32-வது ஓவரை கருணாரத்னே எதிர்கொண்டார். அந்த ஓவரின் 4-வது பந்து பவுன்ஸராக வரவே அதில் இருந்து தப்பிக்க தனது தலையை பின்பக்கமாகத் திருப்பி குனிய முயற்சித்தார் கருணாரத்னே.

ஆனால், வேகமாகப் பந்து, உயரம் குறைவாக எழும்பிய நிலையில், கருணாரத்னேயின் தோள்பட்டையில் பட்டு, பின்னர் தலைக்கும், கழுத்துப்பகுதியிலும் பட்டு தெறித்தது.

கருணாரத்னே ஹெல்மெட் அணிந்து விளையாடிய போதிலும், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பவுன்ஸரின் வேகம், அவரின் ஹெல்மட்டையும் பதம்பார்த்துள்ளது.

பந்து தலையிலும், கழுத்திலும் பட்டவுடன் நிலைகுலைந்த கருணா ரத்னே சரிந்து கீழே விழுந்து மயங்கினார்.

உடனடியாக களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், இலங்கை, அவுஸ்திரேலிய அணியின் உடற்தகுதி நிபுணர்கள், மருத்துவர்கள் என அனைவரும் உடனடியாக மைதானத்துக்கு விரைந்தனர்.

தொடர்ந்து அவரின் நினைவுகள், பேச்சு, கை, கால் அசைவு போன்றவை பரிசோதிக்கப்பட்டது.

ஆனால், கழுத்துப்பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாகவும், தலையில் வலி இருப்பதாகவும் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் பில் ஹக்ஸ் தலையில் அடிபட்டு மரணமடைந்துள்ள நிலையில், கருணாரத்னே களத்தில் சுருண்டுவிழுந்தவுடன் அவுஸ்திரேலிய வீரர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.