பெண்கள் கிரிக்கெட் உலகின் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக இருப்பவர், 22 வயதான ஸ்மிருதி மந்தனா.
தொடக்க வீராங்கனையாக களம் இறங்கும் அவர் அதிரடியில் வெளுத்துக் கட்டி வருகிறார். அதுவும் குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் விளையாடிய 15 போட்டிகளில் 8 அரைச்சதங்களையும் இரண்டு சதங்களையும் அடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது.
அந்த தொடரின் முதல் போட்டியில் 105 ரன்கள், இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற அபூர்வ சாதனையையும் அவர் பெற்றார்.
இன்று வெளியாகியுள்ள ஐசிசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்வுமேன் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 751 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்கும் இவருக்கு மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதால் இவர் நீண்ட காலம் முதல் இடத்தை தக்க வைப்பார் என கூறப்படுகிறது. இவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் எலைஸ் பெர்ரி, மெக் லானிங் முறையே 681 மற்றும் 685 என்ற புள்ளிகளை பெற்றுள்ளார்கள். மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியாவின் கேப்டன் மிதாலி ராஜ் இந்தத் தொடரில் போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் 2 இடங்கள் சரிந்து 669 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். இவருக்கும், 2, 3 வது இடத்தில் உள்ளவர்களுக்கும் 12 புள்ளிகள் மட்டுமே முக்கியம் என்ற நிலையில் இவர் மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.