தாயார் இறந்த செய்தி கேட்டும் தொடர்ந்து ஆடிய கிரிக்கெட் வீரர்!

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ்க்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்பின் தாயார் மரணம் அடைந்த தகவல் அணி வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கண்ணீர் விட்டு அழுத அவருக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். துக்கம் அனுசரிக்கும் வகையில் இரு நாட்டு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

தனது தாயார் இறந்த செய்தி கேள்விப்பட்டும் தொடர்ந்து 2 நாட்களாக தனது அணிக்காக விளையாடிய 22 வயதான அன்சாரி ஜோசப்பிற்கு கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவரது இந்த மன தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.