சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் சக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தனது கணவரின் உடல் நிலை கவனித்துக் கொள்வதற்காக ஒரு முறை பரோலில் வந்த சசிகலா அடுத்த முறை கணவர் மறைந்ததையடுத்து பரோலில் வந்தார். அதன்பிறகு சசிகலா சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார். இந்நிலையில் சசிகலா சிறைச்சாலையில் உடல்நிலை குறைவு உடன் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் அது என்ன பிரச்சனை என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது நரம்பு சம்பந்தமான கழுத்து வலி பிரச்சனை என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்த காலத்திலே சசிகலா கழுத்து பின்புறத்தில் நரம்புகள் பாதிப்பால் வலியில் அவதிப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சசிகலா கடந்த 2 வருடங்களாக சிறைச்சாலையில் இருப்பதால் சிகிச்சையைத் தொடர முடியாத காரணத்தால் மீண்டும் பின்புறம் கழுத்து வலியானது வந்து விட்டது எனவும் அதனை சரி செய்து கொள்வதற்கு சிறைக்கு வெளியேதான் சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பரப்பன அக்ரஹார சிறையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் ஒரு வாரம் ஏதாவது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கலாம். அதற்கு பரோல் விண்ணப்பிக்கலாம் என இளவரசி ஆலோசனை கூறி இருக்கிறார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத சசிகலா தற்போது வெளியேறினால் அதனை வைத்து பல பொய் கதைகளைக் கூறி விடுவார்கள்.
அதனால் நான் சிறையை விட்டு வெளியே செல்லப்போவதில்லை முடிந்தால் மருத்துவர் ஒருவரை சிறைச்சாலை உள்ளே வர வைத்து சிகிச்சை அளிக்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கலாம் என கூறியிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.