அமெரிக்காவில் 5 வயது மகனை கொன்றுவிட்டு, பேஸ்புக் நேரலையில் ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜோவோனி மெக்லண்டன் ஜூனியர் (33). இவர் தனது 27 வயது காதலி மற்றும் 5 வயது மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த 3-ம் தேதியன்று தன்னுடைய தாய்க்கு போன் செய்த ஜோவோனி, நான் என்னுடைய மகனையும், மனைவியையும் கொன்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக பொலிஸாருக்கு போன் செய்து, என்னுடைய மகன் ஒரு நிமிடத்திற்கு முன்பு எனக்கு போன் செய்தான். அவன் எங்களை நேசிப்பதாக தெரிவித்தான். பின்னர் மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டான் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்த ஜோவோனி, ‘உங்களுக்கு தெரியும் அது நல்லது’ எனக்கூறிவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கேள்விப்பட்டதும் உடனடியாக அவருடைய வீட்டிற்கு விரைந்த பொலிஸார், உள்ளே சென்று பார்த்தபோது ஜோவோனி மற்றும் அவருடைய 5 வயது மகன் இறந்த நிலையில் கிடந்தனர்.
அதேசமயம் அவருடைய காதலி, கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார், தீவிர விசாரணையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இதில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கட்டுப்பட்டு அறைக்கு போன் செய்த ஜோவோனி, ‘நான் மூன்றரை வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்ததில் சோர்வாகிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த ஜோவோனி உடன் பணிபுரிந்த நண்பர், மனஅழுத்ததில் இப்படி செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.