ஒதுக்கி வைக்கப்பட்ட இளம்பெண்: பலியான கொடூரம்..

நேபாள நாட்டில் மாதவிடாய் காரணமாக தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மூச்சுத்திணறி மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மாமியாரே முதன் முறையாக கண்டு குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டில் Chhaupadi என்ற பண்டைய நடைமுறையை தற்போதும் கடுமையாக கடைபிடித்து வருகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் அல்லது புதிதாய் பிள்ளை பெற்றுக்கொண்ட பெண்களை அசுத்தமானவர்கள அல்லது துரதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர்கள் என கூறி கிராமத்திற்கு வெளியே குடிசை அமைத்து தங்க வைக்கின்றனர்.

இதில் பெரும்பாலான பெண்கள் பாம்பு தீண்டியும் பெரும் மழையில் சிக்கியும் உயிரை விட்டுள்ளனர்.

இதே வரிசையில் தற்போது 21 வயதான Parwati Bogati என்ற இளம்பெண் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளார்.

அடுத்த நாள் தமது மாதவிடாய் காலம் முடிவடைவதாகவும், குடியிருப்புக்கு திரும்பலாம் என அவர் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும்,

ஆனால் இப்படி மரணத்திற்கு இரையாவார் என கருதவில்லை என அவரது உறவினர் Laxmi Bogati தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று ஜன்னல் ஏதும் இல்லாத குடிசை ஒன்றில் பார்வதி தங்கியிருந்துள்ளார். கடும் குளிர் என்பதால் இரவு நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துள்ளார்.

இதனிடையே அப்படியே தூங்கிப் போன பார்வதி, காலையில் இறந்து கிடந்துள்ளார்.

அவரது மரண காரணம் மூச்சுத்திணறலாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேபாள நாட்டில் குறித்த நடைமுறையை 2005 ஆம் ஆண்டில் இருந்தே அரசு தடை செய்துள்ளது. மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு இதை குற்றகரமான செயல் எனவும் அறிவித்துள்ளது.

இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக கைதாகும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் 30 டொலர் அபராதமும் விதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.