இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக் டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகமான டிக் டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
சீனத்தைச் சேர்ந்த பைட்-டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியில் 15 வினாடிகளுக்கு பயனாளிகள் தங்களின் கருத்தைப் படம் பிடித்து வெளியிட முடியும்.
டிக் டாக் செயலி அறிமுகப்படுத்தப் பட்ட போது, மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 15 வினாடிகளில் வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு உதவுவது தான் இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதைப் போன்று, தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டிக் டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன.
இந்த நிலையில் டிக்டாக்கில் பிரபலமான பெண் ஒருவரின் வீடியோ ஆபாச வலைதளத்தில் வெளியாகியுள்ளது. டிக்டாக்கிற்கு அடிமையான அந்த பெண் எந்நேரமும் டிக்டாக் செயலியில் மூழ்கியிருக்கிறார். இதன் விளைவு அப்போது அவருக்கு தெரியவில்லை.
ஆனால் சில விஷமிகள் அவரின் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து அதனை ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டனர். இது பயங்கர வேகமாக பரவியது. இதனை அறிந்த அந்த பெண் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இது சம்மந்தமாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.