கடமைநேரத்தில் தகாத உறவில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் வைத்தியசாலைக்கு வெளியில் வந்து, வீதியில் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த போராட்டத்தை, வைத்தியசாலை அரசியலுக்காக சில தரப்பு பயன்படுத்த முயற்சிப்பதாக வைத்தியசாலை நிர்வாகத்திலுள்ள சிலர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கு எதிரான வைத்திய நிபுணர்கள் சிலரும் போராட்டத்திற்கு ஆதரவளித்து, வைத்தியசாலை நிர்வாகத்தை முடக்க முயல்கிறார்கள், வைத்தியசாலை உள்ளக அரசியலும் இந்த போராட்டத்தில் கலக்கும் வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
வைத்தியசாலை தாதியர்கள் தொடர்பாக வெளியான செய்திக்கு மறுப்பு வெளியிட வேண்டுமென்பதே, தாதியர்களின் கோரிக்கை. இதன்மூலம், வைத்தியசாலையில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லையென்றுதான் தாதியர்கள் குறிப்பிட முயல்கிறார்கள்.
ஆனால், தமிழ்பக்கத்திற்கு தகவல் தந்த வைத்தியசாலை தரப்புக்கள், சுமார் ஒன்றரை மாதத்தின் முன்னர் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளன. தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டதை வைத்தியர் ஒருவர் வீடியோ எடுத்ததாக செய்திகள் வெளியானபோதும், வைத்தியசாலை பணிப்பாளரே நேரில் சென்று, சம்பவத்தை கையும்மெய்யுமாக பிடித்திருந்தார் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பிட்ட ஆண் தாதி மீது இதேவிதமான குற்றச்சாட்டு முன்னரும் சுமத்தப்பட்டபோதும், அப்போது கடமையிலிருந்து பிரபல வைத்திய நிபுணர் ஒருவர் அவரை காப்பாற்றி வந்ததாகவும், அந்த வைத்திய நிபுணர் ஓய்வுபெற்றதன் பின்னரே, அந்த உத்தியோகத்தர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டதாகவும் தகவல் தந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.
எனினும், அந்த விவகாரத்தில் முறைப்படியான விசாரணையெதுவும் பணிப்பாளரால் நடத்தப்படாமல், விசயத்தை லீக் செய்தார் என்பதே தாதியர் தரப்பு குற்றச்சாட்டு.
எனினும், இன்று காலை 11 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களை சந்திக்கிறார். நடந்தது என்ன என்பதை அவர் அப்போது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.