தம்பிக்கு அரசு வேலை… குடும்பத்துடன் வீட்டை கொளுத்திய அண்ணன்!

மேற்குவங்க மாநிலத்தில் தம்பிக்கு அரசு வேலை கிடைத்த ஆத்திரத்தில் குடும்பத்துடன் சேர்த்து வீட்டை கொளுத்திய அண்ணனை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்கொண்ட மாவட்டத்தை சேர்ந்த, கெடு மொண்டல் என்பவர் தேசிய தன்னார்வலர் படையில் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவருடைய இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில், கெடு மொண்டல் மகன்களான மக்கான், அவரது தம்பி கோபின்டா மற்றும் இருவரின் மூத்த சகோதரரான பிகாஷ் ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் ஒரே வீட்டில் உறங்கியுள்ளனர்.

பணியில் இருக்கும்போதே தந்தை இறந்ததால், அவருடைய அரசு வேலை வீட்டின் இளைய மகனான கோபிண்டாவிற்கு சென்றுள்ளது.

இதனால் இரவு முழுவதும் மனவிரக்தியில் இருந்த மக்கான், அனைவரும் உறங்கிய பின்னர் திடீரென வீட்டில் மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீயிட்டுக்கொளுத்தியுள்ளார்.

இதில் உள்ளே இருந்த கோபின்டா(28) அவரது மூத்த சகோதரர் பிகாஷ் மொன்டல்(32) மற்றும் கோபின்டாவின் இரு மகள்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

மேலும், பிகாஷ் மொன்டலின் மனைவி, மகன், மகள் மற்றும் கோபின்டா மொன்டலின் மனைவி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பி சென்றுள்ள மக்கானை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.