ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் அதே நாளில், மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
மஞ்சள் மேலாடை பிரச்சினைகளிலிருந்து வெளியேற இதை ஒரு வாய்ப்பாக மேக்ரான் கருதும் நிலையில், அந்த வாக்கெடுப்பில் தோற்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
மே 26ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதே நாளில் மஞ்சள் மேலாடைக்காரர்களின் பிரச்சினைகள் குறித்தும் வாக்கெடுப்பு நடத்த மேக்ரான் திட்டமிட்டுள்ளதோடு, ஏற்கனவே அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மேக்ரானின் அரசியல் எதிர்ப்பாளர்கள் வாக்கெடுப்பு நடத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என அவரை எச்சரித்துள்ளனர்.
Philippe Juvin என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், மேக்ரான் இந்த வாக்கெடுப்பில் தோற்றால், பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னொரு நாடளுமன்ற உறுப்பினரான François-Xavier Bellamy,இந்த வாக்கெடுப்பு நிச்சயம் தற்போதைய பிரச்சினையை தீர்க்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் அதே நாளில் இந்த வாக்கெடுப்பை நடத்துவது, மக்களின் கவனத்தை ஐரோப்பிய வாக்குப்பதிவிலிருந்து திசை திருப்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தேர்தல் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய விடயம்.
அன்று, அதன் முக்கியத்துவத்தை தேசிய பிரச்சினை ஒன்றைக்கொண்டு திசை திருப்புவது முறையற்றது என்கிறார் அவர்.
மேக்ரானின் 20 மாத ஆட்சியின்போது மஞ்சள் மேலாடைக்காரர்கள் பிரான்ஸ் அரசியலையே அசைத்துவிட்டார்கள் எனலாம்.
ஏனென்றால், போராட்டங்களுக்கு பணிந்து மேக்ரான் குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்தியதும், அறிவிப்பதாக இருந்த வரி உயர்வை ரத்து செய்ததும் அதற்கு ஆதாரம் எனலாம்.
இத்தகைய சூழலில், மேக்ரான் அவசரப்பட்டு வாக்கெடுப்பு எதிலும் இறங்காமல் இருப்பதே சரி என்கின்றனர் விமர்சகர்கள்.