இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி உருவத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பார்ப்பதாக அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லிக்கு இந்த ஆண்டும் சிறப்பானதொன்றாகவே ஆரம்பித்திருக்கிறது. 2018ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சர்வதேச அளவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று விருதுகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி வகித்து வரும் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட்கோஹ்லியை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில், ஐசிசி துவங்கி ஒரே ஆண்டில் அனைத்து விருதுகளையும் ஒரே நபர் வென்றதாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இனிமேல் வேறு யாரும் இதனை செய்வார்கள் என நான் நினைக்கவும் இல்லை. நீங்கள் சிறந்த கேப்டனாக இருந்தால் மட்டும் தான் வெளிநாடுகளில் தொடரை வெல்வதுடன், அதற்கான விருதுகளையும் வெல்ல முடியும்.
தற்போது இந்திய அணி தான் உலகிலேயே சிறந்த அணியாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை.
நான் தற்போது ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் இருந்து பார்த்து வருகிறேன். விராட் கோஹ்லியை போல யாருமில்லை. பயிற்சிப் பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகர் இல்லை.
இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நான் நினைக்கிறேன். கோஹ்லி பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவு படுத்துகிறார்.
அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்தில் கோஹ்லி பல மடங்கு முன்னேற்றம் அடைந்துவிட்டார். அவர் மேலும், மேலும் நன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.