காதலன் ஏமாற்றியதால் தூக்கில் தொங்கிய பெண் பொலிஸார்!

திருச்சியில் பெண் சிறைக்காவலர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காதலன் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகள் செந்தமிழ்செல்வி (23).

இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் தனி கிளை சிறையில் 2ம் நிலை வார்டனாக பணிபுரிந்து வந்தார். இவரும் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வரும் வெற்றிவேல் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

காவலர் பயிற்சி மேற்கொண்டபொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.

இந்த விவகாரம் அதே சிறையில் வார்டனாக உள்ள வெற்றிவேலின் அண்ணன் கைலாசம் மற்றும் மகளிர் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வரும் அவருடைய மனைவி ராஜ சுந்தரி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது.

செந்தமிழ்செல்வி வேறு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், இருவரும் சேர்ந்து ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது.

மேலும், வெற்றிவேல் தன்னுடைய காதலை முறித்துக்கொண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவும் தயாராகியுள்ளார்.

இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி நேற்றைக்கு முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், செந்தமிழ்செல்வியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள வெற்றிவேல், கைலாசம் மற்றும் ராஜசுந்தரியை பிடிக்க தனிப்படை அமைத்து பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் செந்தமிழ்செல்வியின் அறையில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை’ என அவர் டைரியில் எழுதியிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.