ஐ.நாவின் கணக்குப்படி, 20 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்.
உலகில் வாழும் 200 மில்லியன் பெண்களுக்கு, பிறப்புறப்பின் வெளிபுறம் வெட்டப்பட்டோ, மாற்றப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ உள்ளது.
பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவர இதற்கான சர்வதேச தினம் இன்று (பிப்ரவரி 6) அனுசரிக்கப்படுகிறது.
வயது வந்த பெண்கள், சிறுமிகளின் பிறப்புறப்பு சிறு வயதிலேயே சிதைக்கப்படுகிறது. சில சமயம் குழந்தைகளாக இருக்கும் போது சிதைக்கப்படுகிறது.
இதன் காரணமாக உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வரலாம்.
ஆப்ரிக்காவை சேர்ந்த பிஷாரா சேக் ஹமோ, எனக்கு 11 வயது இருக்கும் போது என் பிறப்புறுப்பு சிதைப்புக்குள்ளாக்கப்பட்டது என்கிறார்.
எனது பாட்டி என்னிடம், “ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அது பரிசுத்தமானது என்று கூறினார்” என்கிறார் பிஷாரா.
ஆனால், என் பாட்டி எனக்கு சொல்லாத சில விஷயங்களும் உள்ளன. இதனால் மாதவிடாய் பாதிப்புக்கு உள்ளாகும். சீறுநீர்பை வாழ்நாள் முழுக்க பாதிப்புக்கு உள்ளாகும். வாழ்நாள் முழுக்க சுகபிரசவமே மேற்கொள்ள முடியாமல் போகலாம் என்கிறார் பிஷாரா ஷேக் ஹமோ.
இப்போது பிஷாரா பெண்பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பெண் பிறப்புறுப்பு சிதைவென்றால் என்ன?
இந்த சடங்கு ‘காஃப்டா’ என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.
இதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
இது பெண்களை உடல்நல ரீதியாகவும், மனநல ரீதியாகவும் பாதிக்கும்.
இது பெரும்பாலும் பெண்களின் விருப்பத்திற்கு மாறாகவே செய்யப்படுகிறது.
பிபிசியிடம் பேசிய பிஷாரா எப்படி நான்கு பெண்களுடன் சேர்த்து நானும் பிறப்புறுப்பு சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டேன் என்பதை விவரித்தார்.
என் கண்கள் கட்டப்பட்டன. நான் ஒரு நாற்காலியின் உட்காரவைக்கப்பட்டேன். என் கைகளும் கட்டப்பட்டன. என் கால்கள் விரிக்கப்பட்டன. அதன் பின் என் பிறப்புறுப்பின் வெளிபுற இதழ்களை ஊசிக் கொண்டு குத்தினர்.
சில நிமிடங்களுக்கு பின், எனக்கு கடுமையான வலி ஏற்பட்டது. நான் கத்தினேன். திட்டினேன். ஆனால், யாரும் அழுகுரலை கேட்கவில்லை. நான் அங்கிருந்து எழ முயன்றேன். ஆனால், என்னால் முடியவில்லை.
இது பரிதாபகரமான ஒன்று. இது சுகாதாரமற்ற ஒன்றும் கூட. அவர்கள் ஒரே கத்தியை பல பெண்களுக்கு பயன்படுத்துவார்கள் என்கிறார்.
பிறப்புறுப்பு சிதைப்பு பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அது பழக்கத்தில் இருக்கிறது என்கிறார்.
இதற்கு மதம் சார்ந்த மூடநம்பிக்கையும், பிற மூடநம்பிக்கைகளும்தான் காரணம். பெண்களை திருமணத்திற்கு தயார் செய்ய, ஆண்களின் உடலுறவு சுகத்தை அதிகரிக்கவென பல மூடநம்பிக்கைகள் இதனுடன் பின்னி பிணைந்துள்ளது.
பெண் பிறப்பு சிதைப்பு செய்யப்படும் சமூகத்தில் அந்த பழக்கத்திற்கு உள்ளாகாத பெண்கள் அசுத்தமானவர்களாக கருதப்படுகிறார்கள்.
இந்த பழக்கத்தை பெண்களுக்கு எதிரான வன்முறையாகவே கருதுகிறார்கள் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
இந்த பழக்கமானது ஆப்ரிக்கா முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது, பின் ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் இந்த பழக்கம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐரோப்பா, வட மற்றும் தெற்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் குடியேறிய சில சமூகங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் உள்ளது.
யுனிசெப்பின் ஆய்வுப்படி ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 29 நாடுகளில் இந்த பழக்கம் உள்ளது.
பிரித்தானியாவில் இந்த பழக்கம் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டாலும், இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
உகாண்டாவிலிருந்து வந்து பிரித்தானியாவில் குடியேறிய பெண்தான் முதல் முதலாக சட்டத்திற்கு புறம்பாக பெண் பிறப்புறுப்பு சிதைப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார்.