சந்திக்கும் டிரம்ப்-கிம் ஜாங் உன்! எங்கு தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருவர் இடையிலான 2வது சந்திப்பு வியட்நாம் நாட்டில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்-கிம் ஜாங் உன் இருவரும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுத ஏவுகனை குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இந்நிலையில், கிங் ஜாங் உன்-ஐ இரண்டாவது முறையாக டிரம்ப் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வியட்நாமில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகையில், ‘பழிவாங்குவது, எதிர்ப்பது, தண்டனை வழங்குவது போன்ற அரசியலை தவிர்த்து ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் பொதுநலன் அடிப்படையிலான அரசியலே சாத்தியப்படக் கூடியது.

சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை, மனித கடத்தல்கள் ஆகியன அமெரிக்காவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கடந்த காலங்களில், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள் ஓட்டளித்த போதிலும் இதுவரை முறையான சுவர் கட்டப்படவில்லை. நான் அதை கட்டுவேன்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான எனது உறவு நன்றாக உள்ளதால் பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் வியட்நாமில் மீண்டும் சந்திக்க உள்ளோம்.

பல ஆண்டுகளாக நமது தொழில்துறைகள், அறிவுசார் சொத்துக்கள், அமெரிக்க வேலை வாய்ப்புகள் மற்றும் வளங்களை குறி வைத்து சீனா நடத்தி வந்த திருட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.