வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக ஆரம்பமாகவுள்ள இச் சாதனைப்பயணம் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
10 ஆம் திகதி 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இச்சாதனை துவிச்சக்கரவண்டிப்பயணம் 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டமையவுள்ளதுடன் மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் 11 மணிக்கு நிறைவுறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.