செருப்பைக் கொண்டு குழந்தைகள் எடுத்த செல்ஃபி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. மேலும் செல்ஃபி மோகமும் உலகளவில் பரவிக்கிடக்கிறது.
தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் செல்ஃபி எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு வகையான பிரச்சனைகளும் நடந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் எடுத்த செல்ஃபி இதயத்தை கனக்கச் செய்ததோடு இணையத்தையே கலக்கி வருகிறது.
அது 5 சிறுவர்கள் இணைந்து ஒரு காலணி மூலம் செல்ஃபி எடுப்பது போன்ற ஒரு புகைப்படம். வெகுளித்தனமான அந்த சிறுவர்கள் கள்ளம்கபடமற்று, குழந்தைத் தனத்தோடு சிரிக்கும் புகைப்படம் காண்பவர்களின் மனதை கனக்கச் செய்கிறது.
இந்த குழந்தைகளின் புகைப்படத்தை திரைப் பிரபலங்கள் பலரும் ஷேர் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பாலிவுட் நடிகர் போமன் ரானி இந்த புகைப்படத்தை பதிவிட்டு ‘நீங்கள் எதை தேர்ந்தெடுக்குறீர்களோ அதிலேயே மகிழ்ச்சி காண்கிறீர்கள். இது மிகவும் உண்மையான ஒன்றாகும். இந்த செல்ஃபி பலரது அன்பையும் பெறும்’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் இணையத்தை கலக்கிய சிறுவர்களின் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என எந்த தகவலும் தெரியவில்லை.