இறப்புச் சான்றிதழுக்கு கையெழுத்திட ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பார்வை இழந்த மாற்றுத்திறனாளி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான இவரது தந்தை குருசாமி சமீபத்தில் இறந்தார்.
இதனையடுத்து இறப்புச் சான்றிதழுக்காக கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார்.
இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி இறப்புச்சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பென்சன் ரூ.1000-ஐ பெற்றுக்கொண்டும், பிச்சை எடுத்தும் நான் ஜீவனம் நடத்தி வரும் நிலையில் தன்னால் ரூ.3 ஆயிரம் எப்படி வழங்க இயலும் என்று எடுத்துக்கூறியும் கிராம நிர்வாக அதிகாரி கேட்கவில்லை.
எனது தந்தையின் இறப்புச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நாகராஜ், திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 4 மாதங்களாக நடையாக நடந்து வந்தும் பயனில்லை.
இதனால் மனம் நொந்த மாற்றுத்திறனாளி நாகராஜ் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக போர்டிகோ அருகில் தான் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த அருகிலிருந்த காவலர் அவரை காப்பாற்றினார்.
அப்போது அங்கு வந்த உதவி ஆட்சியர், நாகராஜின் மனுவை வாங்கி விசாரணை செய்தார். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவும் அங்கு வந்து நாகராஜிடம் விசாரணை செய்தார்.
இரண்டு அதிகாரிகள் முன்பும் நாகராஜ் கதறி அழுதவாறு தனது கோரிக்கையை விளக்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.