நம்மில் அநேகம் பேர் உடல் சூட்டால் பாதிக்கப்படுகிறார்கள், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களானாலும் சரி, வாகனங்களிலேயே அலைந்து திரிந்து மார்கெட்டிங் மற்றும் விநியோகப்பணி செய்பவர்களானாலும் சரி, அனைவரையும் பாதிக்கிறது உடல் சூடு.
கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக தட்பவெப்பம் காரணமாகவும், அதிக நேரம் உட்கார்ந்து கணினியில் பணி செய்வதாலும், வேலை சூழலால் பகலில் அதிக நேரம் வெளியில் அலைவது காரணமாகவும், மற்றும் நல்ல காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் பணியாற்றுவதாலும், உடல் சூடு ஏற்படுகிறது.
முக்கியமாக, இரவுப்பணியில் இருக்கும் அனைவருக்கும், உடல் சூடு ஏற்படுகிறது. மேலும், இரவு வெகுநேரம் உறங்காமல் தொலைக்காட்சி அல்லது கணினியில் கவனம் இருப்பதாலும், உடல் சூடு ஏற்படுகிறது.
உடல் சூட்டை போக்கும் எளிய மூலிகைகள்!
நல்லெண்ணை,பூண்டு மிளகு..
நல்லெண்ணை,பூண்டு மிளகு, ஒரு ஆலக்கரண்டியில் [ அல்லது சாதாரண கரண்டி ] மூன்று டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி, சூடு படுத்தவும், நல்ல சூடு வந்தவுடன், ஒரிரு பல் தோல் உரிக்காத பூண்டுகளை, எண்ணையில் இடவும், அத்துடன், மூன்று மிளகுகள் இடவும், ஒரு நிமிடத்துக்குள், அடுப்பை அணைத்துவிடவும்.
பயன்படுத்தும் முறை- இந்தக்கலவை அடுப்பில் இருக்கும்போதே, ஒரு தெய்வீக நறுமணம் காற்றில் கலப்பதை, சுவாசத்தில் உணரலாம்.
சற்றுநேரம் சூடு ஆறியபின், உடல் கைகால்களை நன்கு சுத்தம்செய்து அமர்ந்துகொண்டு, இரண்டு கால் பெருவிரல் [ கட்டை விரல் ] நகங்களில் மட்டும் இந்த எண்ணையை நன்கு தடவவும், சில நிமிடங்களில், கால்களை மீண்டும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். இந்த எண்ணை நகங்களில் பட்டதுமே, உடலில் குளிர்ச்சி உண்டாவதை உணரலாம்,
இல்லையெனில், காலையில் குளிப்பதற்கு முன்னால், அல்லது மாலையில் வீடு திரும்பியபின், மீண்டும் சில தினங்கள் செய்து வரவும். உங்கள் உடல் சூடு விலகி, நீங்கள் மீண்டும் முகமலர்ச்சியுடன் விளங்குவதை, அனைவரும் கண்டு மகிழ்வார்கள்.
அகத்திச்சாறு தைலம்!
அகத்தி இலைகள் இரண்டு கைப்பிடி, நல்லெண்ணை 50 மில்லி, பாலில் ஊறவைத்த வெந்தயம் சிறிது. செய்முறை: அகத்தி இலைகளை நன்கு அரைத்து சாறெடுத்து, அடுப்பில் சிறிய எண்ணை சட்டியில் கொதிக்கும் நல்லெண்ணையில் ஊற்றி அத்துடன் பாலில் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து நன்கு கிளறவும், எண்ணையில் தண்ணீர் வற்றி, தைலப்பதத்தில் வந்ததும், அடுப்பை அணைக்கவும்.
இந்தத் தைலத்தை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தலைக்கு தேய்த்து குளித்துவர, உடல் சூடு விலகி ஓடியே, போய்விடும். கற்றாழை ஜெல்! சோற்றுக்கற்றாழை மடல் எடுத்து, அதன் உட்புறம் உள்ள சதைப்பகுதியை தனியே எடுத்துக்கொள்ளவும்.
அந்த ஜெல்லை, அதன் கார நெடி விலகும் வரை, நீரில் ஆறு அல்லது ஏழு முறை அலசி, அதில் இரண்டு நெல்லிகாய் அளவு எடுத்து, அத்துடன் சற்று கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, நன்கு சுவைத்து சாப்பிடவும். இதைக் காலையில் வெறும் வயிற்றில் மட்டுமே, சாப்பிட வேண்டும். சில தினங்களில், உடல் சூடு தணியும்.
செய்ய வேண்டியவை- கூடுதல் சேவையாக, இந்த அற்புத சோற்றுக்கற்றாழை, நம் உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்தி, உடலுக்கு அதிக ஆரோக்கியத்தையும் தரும்.
மேலும், கோடைக்காலங்களில் தினசரி உணவில், ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளுதல், தினமும் இரவில் உறங்கச் செல்லும்போது தொப்புளில் விளக்கெண்ணை தடவுதல், அதிகம் தண்ணீர் மற்றும் நீர்மோர் அருந்தி வருதல் போன்ற செயல்களாலும், உடல் உஷ்ணம் நீங்கி, உடல் நலம் பெற்று நிம்மதியடையலாம்.