நள்ளிரவில் அலறிய அதிமுக எம்.எல்.ஏ வீட்டின் கதவு.!

மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 திருடர்களில் மூவர் தப்பி ஓட, ஒருவரை மட்டும் அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் அவர்களின் வீடு மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலம் கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டுக்கு எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் எப்போதாவது அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனை நோட்டமிட்ட திருடர்கள் நான்கு பேர், நேற்று இரவு 11.30 மணியளவில், எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் அவர்களின் பூட்டிக்கிடந்த வீட்டின் பின்பக்கம் உள்ள காம்பவுண்டு சுவரை தாண்டி, வீட்டின் முன்பக்க கதவை தடிமனான இரும்பு கம்பியால் அடித்து தாழ்ப்பாளை உடைத்துள்ளனர்.

கதவு உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கிதினர் சத்தம் போட்டுக்கொண்டே எழுந்து ஓடி வந்துள்ளனர். இதனையறிந்த அந்த கொள்ளையர்கள் தப்பி ஓட, அவர்களில் ஒருவன் மட்டும் சிக்கினான். அவனை பிடித்து தர்மஅடி கொடுத்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பிடிபட்டவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில், அந்த பிடிபட்ட கொள்ளையன் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி கணேச நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பது தெரியவந்து உள்ளது.

மேலும் தப்பியோடிய 3 கொள்ளையையர்கள் குறித்து போலீசார் கொள்ளையன் கார்த்திக்கிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.