இளம்பெண்கள் திடீர் மர்ம மரணம்.!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தனியார் பஞ்சாலை விடுதி யில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 6 மாதத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருக்கும் இவரது உறவினர் சோனிபாய்(21) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி பிரிவில் உள்ள ஒரு தனியார் பஞ்சாலையின் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தனர்.

பிப்ரவரி 5 அன்று மாலை அனில்குமார் பஞ்சாலை பணிக்கு சென்றுவிட்டார். பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது சோனிபாய் சுடிதாரின் துப்பட்டாவால் வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோனிபாயின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சோனிபாய் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த சோனிபாயின் பெற்றோர்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். ஒடிசாவில் இருந்து பெற்றோர்கள் வந்தவுடன் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து அதன் பிறகு உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

திருமணம் ஆகி 6 மாதம் ஆனதால் பழனி உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார். வேடசந்தூர் பகுதியில் அடிக்கடி தனியார் பஞ்சாலைகளில் இளம்பெண்களின் மர்ம சாவு தொடர்கதையாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தனியார் பஞ்சாலைகளில் இளம்பெண்கள் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.