துருக்கியில் 8 மாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில் அடியில் சிக்கியிருந்த 5 வயது சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
துருக்கி இஸ்தான்புல்லில் Kartal மாவட்டத்தில் உள்ள 8 மாடி கட்டிடம் புதன்கிழமையன்று திடீரென சரிந்து விழுந்தது.
அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருந்த 14 வீடுகளில் 43 பேர் வசித்து வந்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் சிக்கி கொண்ட 9 வயது சிறுவன் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டான். அதேபோல 8 மாடி கட்டிடத்திற்கு அடியில், சிக்கிக்கொண்டிருந்த Havva Tekgoz என்கிற 5 வயது சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இஸ்தான்புல் ஆளுநர் அலி ஏர்லிகாயா கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள மூன்று தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.