கறுப்பா? காவியா? சர்ச்சையை கிளப்பிய நடிகர்!!

கோவை விமான நிலையத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் ஆனா கமல்ஹாசன் வந்தபோது, செய்தியாளர்களிடம், “மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி வைக்காது. நாம் மக்களுக்கு நல்லதை பகிரும் போது கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

அவசரமாக கைகுலுக்கல் செய்து கைகளை அழுக்காக்க கூடாது என நினைக்கிறோம். அதிமுகவுடன் கூட்டணியா என நினைக்க வேண்டாம். நான் கட்சி ஆரம்பிக்கும் முன்பிருந்தே அதிமுகவை எதிர்க்கிறேன். எனவே எதனுடனும் கூட்டணி கிடையாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் பேசுவது புதிதாக தோன்றவில்லை. இது அவரது வழக்கம். ஆனால், இஸ்லாமிய திருமணத்தில் சென்று இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசியிருக்க தேவையில்லை என நினைக்கிறேன் எனவும்,

ஒருவேளை அமமுகவுடன் கூட்டணி இருக்குமோ என நினைத்தால், அதுவும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவீர்களா? என செய்தியாளர் கேட்டமைக்கு, விரைவில் அறிவிக்கப்படும் அதை நோக்கி தன் எங்கள் பயணம் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதற்கு, திமுகவின் எம்.எல்.ஏ வான நடிகர் சந்திரசேகர் ‘திமுக அழுக்கு படிந்த கட்சி’ என கமல்ஹாசன் கூறுவது நாகரிகம் அற்றது என கூறியுள்ளார். இதுகுறித்து,” ட்வீட்டர் அரசியல் செய்யும் கமல்ஹாசன் திமுக பற்றி இவ்வாறு விமர்சிப்பது தனது சுயவிளம்பரத்திற்காக தான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,

வெற்றிடம் என நினைத்து கட்சி தொடங்கி டுவிட்டர் கனவுகளில் மிதந்தபடி, அரசியல் செய்ய நினைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனக்கான விளம்பரம் தேடிக் கொள்வதற்காக தி.மு.க. நோக்கி விமர்சனம் செய்வது அவரது அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.

அடிமைத்தனமும் அவலட்சண நிர்வாகமும் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கும் நேரத்திலும், அதற்கு சரிசமமாக தி.மு.க. மீதும் விமர்சனக்களைத் தொடுத்து, தன்னை ‘மய்ய’த்தில் நிற்கும் நடுநிலைவாதி போலக் காட்டிக் கொள்ளும் அரதப் பழசான டெக்னிக்கையே கமல் கையாள நினைக்கிறார்.

தி.மு.க. அழுக்குப் பொதி ஊழல் கட்சி என கமல் விமர்சித்திருக்கிறார். ‘கலைஞரிடம் தமிழ் கற்றேன்’ என்று சொல்லும் கமல், அந்தக் கலைஞரின் தலைமையில்தான் அரை நூற்றாண்டு காலம் இந்தப் பேரியக்கம் நெருக்கடி நெருப்பாறுகளில் எதிர் நீச்சல் போட்டு நிலைத் திருக்கிறது என்பதை மறந்தது எப்படி? மறைப்பது ஏன்?

திட்டமிட்டு புனையப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொண்டு புடம் போட்ட தங்கமாக வெற்றி பெற்ற இயக்கம் தி.மு.க.

திராவிடம் பற்றி விளக்க உரையாற்றும் கமல், திராவிடப் பேரியக்கமான தி.மு.க. மீது தீராவிடத்தைக் கக்குவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எவர் தூண்டி விடுகிறார்கள்?

தேர்தல் நேரத்தில் அவருக்குத் தோன்றிய திடீர் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயமா? பதற்றமா? தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதை அறிந்ததும், காங்கிரஸ் கட்சிக்கு தூது விட்டு அது முடியாமல் போனதால், தன் ஆற்றாமையைக் கொட்டுவதற்கு தி.மு.க.வின் மீது புழுதி தூற்றுவது அவரது அரசியல் கத்துக்குட்டித் தனத்தையே காட்டுகிறது.

தி.மு.க. மீது விமர்சனம் செய்யும் கமலுக்குத் தெரியாதா? ஊழலுக்காக உச்ச நீதிமன்றம் வரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி, தனது திரைப்படத்துக்கு கடும் நெருக்கடி தந்து, இந்த நாட்டை விட்டே வெளியேறும் மனநிலைக்குத் தள்ளிய ஜெயலலிதாதான் என்பது?

ஜெயலலிதாவை குன்ஹா கோர்ட்டே தண்டித்த நிலையிலும், அவர் உயிருடன் இருந்தவரை அது பற்றி வாய் திறக்க வக்கில்லாமல், அவர் இறந்த பிறகு திடீர் ‘விஸ்வரூபம்‘ எடுத்து வீர வசனம் பேசிய போதே கமலின் மேக்கப் மக்கள் முன் கலைந்து விட்டது.

கறுப்பா? காவியா?, கறுப்புக்குள் காவியா? என்று தன் நிலை என்னவென்ற குழப்பத்தில் இருக்கும் கமலுக்கு, கறுப்பு-சிவப்பு எனும் இரு வண்ணமும் தங்கள் உயிரிலும் உதிரத்திலும் கலந்திருக்கும் கோடானு கோடி தொண்டர்களைக் கொண்ட தி.மு.க. மீது பழி சுமத்த என்ன அருகதை உள்ளது.

அரசியல் என்பது படத்துக்குப் படம் மாற்றிக் கொள்கிற இயக்குநர்கள் அல்ல. அடித்தட்டு மக்களின் துன்ப துயரங்களில் துணை நிற்பதாகும். ஊராட்சிகள் தோறும் கூட்டம் நடத்தி மக்களைச் சந்திக்கும் இயக்கத்துக்கும், ஊர் சுற்றிப் பார்க்கப் போவது போல டூர் அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

‘இதுதான் எனக்கு கடைசி படம், நான் அரசியலுக்கு வந்து விட்டேன்’ என்று சொன்னவர், பிக்பாஸ்களிலும், திரைப்படங்களிலும் மீண்டும் நடிக்க வந்து விட்டு, மக்களுக்கு அளித்த முதல் வாக்குறுதியையே காப்பாற்றாத நிலையில் தி.மு.க.வைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

வெற்றிடம் என நம்பி வந்து வீணாய்ப் போனவர், விரக்தியின் உச்சத்தில் நிதானம் தவறிப் பேசுகிறார். கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் கலைந்து போய்விட்ட தனது அரசியல் அரிதாரத்தை சரி செய்ய, அவதூறுச் சேற்றை கையில் அள்ளி முகத்தில் பூசி, புது மேக்கப் போடுகிறார் கமல். இனி அவர் போடும் வேடம் எதுவும் அரசியலில் எடுபடப் போவதில்லை. ” என தனது அறிக்கை மூலம் கூறியுள்ளார்