“குழந்தை ஏன் கருப்பா பிறந்துச்சு?”- மனைவியை துரத்திய ஆசிரியர்….!

தேனி மாவட்டம் எல்லைத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவருக்கும், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்த மனோஜா (வயது 26) ஆகிய இருவருக்கும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

பிரபாகரன் தேனியில் உள்ள தனயார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.

திருமணத்தின் போது, இவருக்கு எல்லா சீர் வரிசையும் தந்து, பெண்ணுக்கு 35 பவுன் நகைகளைப் போட்டு, சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தனர், பெண்ணின் பெற்றோர்.

சமீபத்தில், மனோஜாவிற்கு, ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை ஏன் கருப்பாக இருக்கிறது? என்று கூறி பிரபாகரனும், அவரது குடும்பத்தாரும் மனோஜாவையும், அந்தக் குழந்தையையும் திட்டிக் கொண்டே இருந்தனர்.

இதற்கிடையே, பிரபாகரனின் பெற்றோர், “ என் மகனுக்கு, மறு கல்யாணம் செய்யப் போகிறோம். 100 பவுன் நகைகள் போட்டு, பெண் தர தயாராக உள்ளனர். நீ இந்த வீட்டில் வாழ வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் சொல்லி, 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கி வா”, என்று, அந்தப் பெண்ணை, வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி உள்ளனர்.

பொறுத்துப் பார்த்த அந்தப் பெண், இறுதியாக, தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில், தன்னையும், தன் குழந்தையையும் கொடுமைப் படுத்தி, வரதட்சணைப் பணம் கேட்டு சித்ரவதை செய்த, தன் கணவன் பிரபாகரன் மற்றும் அவரது பெற்றோர் மீது, புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், வரதட்சணை கேட்டு கொடுமை செய்த குற்றத்திற்காக, பிரபாகரன் மற்றும் அவர் பெற்றோர் உட்பட 4 பேரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.