தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாய் இளவரசருடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக 5 லட்சம் செலுத்தி ஏமாந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உளவியலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் மொஹம்மத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்.திடீரென்று ஒருநாள், இளவரசரின் டுவிட்டர் கணக்கில் இருந்து இவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதில், துபாய்க்கு வந்து அரச குடும்பத்துடன் மதிய உணவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இளவரசரிடம் இருந்து நேரடியாக இப்படியொரு அழைப்பு வந்திருப்பதால் திக்குமுக்காடிப் போனார் அந்தப் பெண்.
ஆனால், அரண்மனைக்குள் நுழைய வேண்டுமெனில், ராயல் கார்டு என்ற விசேட அட்டை வேண்டும் என்றும், அதற்கு ஐந்து லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் இளவரசர் கணக்கில் இருந்து வந்த அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மட்டுமின்றி வெஸ்டர்ன் யூனியன் வங்கி மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அந்த குறுந்தகவலில் குறிப்பிட்டிருக்க, ‘எனது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக செலுத்துகிறேன்’ என்று கூறி, 5 லட்சம் ரூபாயை அனுப்பி இருக்கிறார் அப்பெண்.
அதன்பின், அந்த டுவிட்டர் கணக்கில் இருந்து குறித்த பெண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை.பலமுறை குறித்த இளம்பெண் தகவல் அனுப்பியும், இளவரசரிடம் இருந்து பதில் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து ஐக்கிய அமீரகத்தின் துபாய்க்கே நேரடியாக சென்ற அவர், அரச குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, ‘போலி டுவிட்டர் கணக்கு மூலம் நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள்’ என்று அவரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார் அவர்.
அதன்பின்னர், துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் அவர் புகார் செய்ய, அதன் பிறகு, இதே போன்று பலரும் ஏமாந்து இருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.பின்னர் தூதரகத்தின் ஆலோசனைப்படி, மத்திய குற்றப்பிரிவு பொலிசாரிடம் அவர் புகார் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இளவரசரின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அவர்களால் தான் பலரும் பணம் இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.