கும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40) டிரைவர். இவரது மனைவி சீத்தாலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூத்த மகன் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஷரிஸ் 6-ம் வகுப்பும், ரித்திஸ் 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். அண்ணன்-தம்பியான ஆகாஷ், ஷரிஸ் இவர்கள் இருவரும் அடிக்கடி பள்ளி செல்லாமல் ஊரை சுற்றி வருவதால், இவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பது வழக்கம்.
இன்றும் இவர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் இவர்களது 3-வது மகன் ரித்திஸ் பள்ளிக்கு சென்றுவிட்டார். இவர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லாததால் கோபம் அடைந்த சீத்தாலட்சுமி, 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்தார்.
இதனால் மனம் தளர்ந்த ஆகாஷ், ஷரிஸ் 2 பேரும் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டனர். அவர்களின் இருவர் வாயிலும் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்ததை பார்த்த சீத்தாலட்சுமி மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்கள் இருவரையும் தஞ்சை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைப்பற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.