ஹிட்லரின் ஓவியங்களை கைப்பற்றிய பொலிசார்! காரணம் என்ன?

ஜேர்மனியில் நாஜி தலைவர் அடால்ப் ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலத்திற்கு விட இருந்த நிலையில், பொலிசார் அனைத்து ஓவியங்களையும் பறிமுதல் செய்தனர்.

நியூரெம்பர்க் நகரில் ஹிட்லர் வரைந்த ஓவியங்கள், பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை ஏலத்தில் விடும் நிகழ்வு நடைபெற இருந்தது. அவற்றில் வாட்டர்கலர் ஓவியங்களின் ஆரம்ப விலை 45 ஆயிரம் யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஹிட்லர் பயன்படுத்திய பொருட்களான ஸ்வஸ்திகா முத்திரை கொண்ட விக்கர் நாற்காலி, குவளை ஆகியவையும் ஏலத்தில் விடப்பட இருந்தன. இந்நிலையில் ஜேர்மன் பொலிசார் டன் கணக்கிலான கலைப்படைப்புகள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஹிட்லரின் பெயரைக் குறிக்கும் AH அல்லது A என்ற எழுத்துக்களைக் கொண்ட 63 படைப்புகள் போலியானவையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அடையாளம் தெரியாத தனிப்பட்ட நபர்களிடம் தொடங்கிய விசாரணையில், ஆவணங்களை பொய்மைப்படுத்துதல் மற்றும் மோசடி முயற்சி ஆகியவற்றின் சந்தேகம் எழுந்துள்ளதாக நியூரெம்பர்க் நகர தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏலம் நடத்த இருந்தவர்கள் தாமாகவே இந்த படைப்புகளை ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மோசடி பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஹிட்லரின் ஓவியங்கள் ஏலத்தில் விடப்படும் நிகழ்வு தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.