ஸ்பெயினில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், இனப்படுகொலையால் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் விடியலுக்கான வெளிச்சம் பரவத் தொடங்கிவிட்டது என்பதற்கான பிரகடனமே ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா மாநகர சபை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஆகும்.
அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அரசியல் மற்றும் போர்க்கைதிகள் தாமதமின்றி விடுவிக்க வேண்டும், தமிழினப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை, தமிழர் வாழும் பகுதிகளில் 36 ஆண்டுகளாக இருக்கும் இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், தமிழ் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்த வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதற்காக பார்சிலோனா மாநகர சபைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், பார்சிலோனா மக்களுக்கும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழர் இயக்கத்துக்கும் நன்றி.
இந்தத் தீர்மானத்தின் விளைவாக ஐரோப்பாவின் ஏனைய பல நகர சபைகள் தமிழர் இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.
தமிழீழ வடமாகாண சபை, தமிழக சட்டப்பேரவை போன்றவற்றைத் தொடர்ந்து மிகவும் வலுவான தீர்மானமாக வெளிவந்திருக்கும் இத்தீர்மானமானது தமிழின அழிப்புக்கு எதிரான நீதிக்கான மற்றும் இறையாண்மைக்கான பயணத்தில் ஒரு பெரிய முன்நகர்வாகும் என்று கூறியுள்ளார்.