லண்டனை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: ரத்த வெள்ளத்தில் இளைஞரின் சடலம்

தலைநகர் லண்டனில் இனாமாக சிகரெட் தர மறுத்ததால் நபர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் கிழக்கு டூல்விக் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கும் பல் பொருள் அங்காடி ஒன்றில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொல்லப்பட்ட நபருக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சம்பவத்தின் போது குறித்த பல் பொருள் அங்காடியில் முகமது கான் என்பவர் பொறுப்பில் இருந்துள்ளார்.

அப்போது 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த அங்காடிக்குள் வந்து ஒருவரிடம் சிகரெட் ஒன்றை இனாமாக கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஒருகட்டத்தில் சிகரெட் இனாமாக கேட்ட அந்த நபர் 6 அங்குல நீளமான கத்தியை உருவி சிகரெட் தரமறுத்த அந்த நபரின் கழுத்தை தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த நபர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். வெறும் 20 நொடிகளில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக முகமது கான் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் கத்தியை உருவியதும் அப்போது அந்த அங்காடியில் இருந்த பலர் அதை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரை இதற்கு முன்னர் அந்த பகுதியில் கண்டதில்லை என முகமது கான் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இந்த ஆண்டு மட்டும் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்படும் 10-வது சம்பவம் இது என கூறப்படுகிறது.